Tuesday, 23 June 2020

இந்த கொரோனா லாக்டௌன் வந்தாலும் வந்தது, மூன்று மாதமாக வீட்டிற்க்குள் அடைபட்டு இருக்கிறோம்.வாசல் படியைக்கூட நான் தாண்டவில்லை. பல நண்பர்கள் பொழுதே போகவில்லை என்று அங்கலாய்க்கிறார்கள்.ஆனால் எங்களுக்கோ பொழுதே போறவில்லை.

அதிகாலை வெந்நீர் குடிக்கும் படலத்துடன் துவங்கும் எங்கள் தினம்.இது பலவருடப்பழக்கம். பிறகு வாசலில் இருந்து பால் பாக்கெட்டுகளை எடுக்க என்னை தயார் படுத்திக்கொள்வேன்.திகில் படத்தில் வருவது போல், இரண்டு கைகளிலும் ஒரு துணியை கட்டிக்கொண்டு, கதவருகில் செல்வேன்.கணவர் கதவை திறக்க, நான் எதிலும் படாமல் அதில்  கட்டி இருக்கும் கூடையை பிரித்து, அப்படியே பின்பக்கம் சோப்புத்தண்ணீர் நிறைந்த பக்கெட்டில் போட்டுவிடுவேன்.உடனே திறந்து வைத்திருக்கும் வாஷிங் மெஷினில் கையை உதறினால் துணி உள்ளே விழுந்து விடும். பிறகு கைகளை நன்றாக கழுவி விடுவேன். அரை மணி கழித்து பால் பாக்கெட்டுகளை ப்ரிட்ஜில் வைத்து விடுவேன். இதன் பிறகு கணவருக்கு காபி, எனக்கு எலுமிச்சையும் தேனும் கலந்த டீ. சிறு இடைவேளைக்கு பிறகு பிராணாயாமம்,யோகா, வாக்கிங் எல்லாம் தொடங்கும். சோபாவை நகர்த்தி வீட்டிற்குள்ளேயே கணவர் 8 போட்டு நடப்பார். சில சமயங்களில் இருவரும் வேகமாக நடந்து மோதிக்கொள்வதும் உண்டு. பின்னணியில் ஹனுமான் சாலிசா,விஷ்ணு சஹஸ்ரநாமம் என ஸ்லோகங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். வீடே பக்திமயமாகி விட்டது.எல்லாம் கொரோனாவின் கைங்கர்யம்.

சுறுசுறுப்பாக இருக்கும் இந்த வேளையில்,வீட்டு வேலையை முடிப்பதுதான் சரி. வேலை செய்யும் பெண் இல்லாததால்,மூன்று நாட்களுக்கு ஒரு முறை,நான் பெருக்க, கணவர் mop வைத்து துடைப்பார்.இந்த வேலையில் அவர் எக்ஸ்பர்ட் ஆகி விட்டார்.பள பளவென்று தரை மின்னுகிறது.இனி வேலைக்கு ஆள் தேவை இல்லையோ?

அடுத்து அகலமான பாத்திரத்தில் வெந்நீர் ஆவி பிடிக்கும்  படலம்.திடீரென்று கட கடவென்று ஒலி  கேட்கும்.பயப்பட வேண்டாம்.கணவர் உப்பு/மஞ்சள் தண்ணீரில் gargle செய்து கொண்டிருக்கிறார்.இப்போதெல்லாம் என் சமையலறை ஒரு குட்டி workshop போல் தோன்றுகிறது.ஒரு பாத்திரத்தில் இஞ்சி,ஓமம்,சோம்பு,ஜீரகம் என ஒரு கலவை கொதித்துக்கொண்டிருக்கும். நாள் முழுவதும் இந்த நீரை அவ்வப்போது குடித்தால் நல்லது என்று சொல்கிறார்கள்.கொரோனாவிலிருந்து தப்பிக்க, என்னவெல்லாம் சாப்பிட வேண்டுமோ அதை கணவர்  தான் தயாரிப்பார். எதிர்ப்பு சக்திக்காக இரண்டு பூண்டு துண்டுகளை பொடிப்பொடியாக நறுக்கி வைப்பார்.கட கடவென்று அதை தண்ணீருடன் முழுங்க வேண்டியது தான்.  .Breakfastட்டுடன்   பாதாம்,பிஸ்தா என ஒரு dry fruit கலவை காத்திருக்கும்.அதையும் உட்கொண்டால் உடம்புக்கு ப்ரோட்டீன்,வைட்டமின் மற்றும் ஏராளமான சத்து கிடைக்குமல்லவா ? இந்த அரக்கனை வெல்ல சக்தி வேண்டாமா?

பூஜை செய்ய உட்கார்ந்தால் தூக்கம் கண்களை சுழற்றும்!பின்னே இவ்வளவு விஷயங்கள் வயிற்றில் போனால் எப்படி ? இதன் பிறகு வெய்யிலுக்கு இதமாக ஜீரகம் கலந்த மோர்.இதனிடையில் என் கணவர் ஒரு சின்ன கிண்ணம் தண்ணீரில் ஒரு சிட்டிகை ஸ்வாமி வீபூதியை கலந்து ஸ்லோகம் சொல்லிக்கொண்டே எல்லா அறைகளின் முக்கிலும் தெளிப்பார்.எங்கள் சாய் குழுவில் ஒருவர் சொன்னதால் ஏற்பட்ட நம்பிக்கை.

வாரம் ஒருநாள்,  mineral water can சப்ளை செய்பவன் வந்தால் ஒரே டென்ஷன் தான்.அவன் வண்டி வரும்போதே, கணவரை எச்சரிப்பேன்.அவர் மாஸ்க்கை அணிந்துகொண்டு கதவை திறந்து வைத்து தயாராக இருப்பார். அவன் உள்ளே வந்து விடுவானோ என்ற  டென்ஷனில், படபடப்பாக,அங்கேயே வைத்து விடுங்கள் என்று கையை காண்பிப்பார்.அவன் வாசலில் வைத்து விட்டு போய் விடுவான். இதன் நடுவே onlineல் dunzo,big basket என்று காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் வரவழைத்தால் போச்சு.காலையிலேயே கணவர் டென்ஷனுடன் டெலிவரி செய்பவனின் போனிற்காக காத்திருப்பார். மெயின்   கேட்டில் போய் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். மாஸ்க், gloves ,sanitizer  என்று தன்னை காபந்து செய்து கொண்டிருக்கிறாரா என்று ஒரு போலீஸ்காரி போல செக் செய்வேன்.ஒன்றும் மறக்கக்கூடாது அல்லவா? மாடிப்படி வழியாக கீழே போய் ஐந்து நிமிடங்களில் லிப்ட்டில் வந்து விடுவார். சாமான் பையை அப்படியே வாசலில் வைத்துவிட்டு  குளிக்க போய் விடுவார். காய்கறிகளை,உப்பு மஞ்சள் தண்ணீரில் கழுவி, காயவைத்து, தனித்தனியாக பிரித்து பிரிட்ஜில் வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சாப்பாடு முடிந்து அப்பாடா என்று உட்கார்ந்தால், இரண்டு amla candy காத்திருக்கும். யார் என்ன சொன்னாலும் அதை கேட்டு விடவேண்டியதுதான்.

மதியம் க்ரீன் டீ அல்லது சுக்கு காபி அருந்தும் நேரம்.5 மணிக்கு மேல் இஞ்சி,மிளகு, பட்டை,கிராம்பு, வெற்றிலை,எலுமிச்சை கலந்த ஒரு கஷாயம் தயாரிக்கப்படும்.அதையும் குடிக்க வேண்டியதுதான்.ஏழு ஏழரைக்குள் dinner க்கு பிறகு இன்றைய கடை முடிந்தது என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை.படுக்கும் முன் கணவருக்கு "கோல்டன் மில்க் "! மிக ஸ்டைலான பெயர்! பாலில் மிளகும் மஞ்சள் பொடியும் சேர்ந்ததுதான் அது. இத்துடன் அவர் கொரோனா எதிர்ப்பு சக்தி diet முடியும்.எனக்கு பால் ஒத்துக்கொள்ளாது.அதனால் குல்கந்து நீர்.அட ,அது வேறா என்றால், ஒரு பிரபல dietician வீடியோவில் சொன்னதால்,நான் அதை எடுத்துக்கொள்கிறேன். நன்றாக தூக்கம் வருமாம் ! acidity  போயே போய் விடுமாம்! எல்லாம் ஒரு நம்பிக்கை தான்.

நாள் முழுவதும் கொரோனவை தடுக்க, இப்படி சாப்பிட்டுக்கொண்டும்.ஏதாவது குடித்துக்கொண்டும் இருக்கும் இடையில், பல டெலிபோன் call கள், zoom meet ல் நண்பிகளுடன் கூட்டுப்பிரார்தனை,பஜன்,அரட்டைக்கச்சேரி, netflix /amazon ல் வெவ்வேறு பாஷைகளில் சினிமா    என்று பலவித நிகழ்வுகள் வேறு!

ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.ஒரு homoepathy மருந்து மூன்று நாட்களுக்கு, மூன்று மாதம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்லது என்றார்கள்.அதையும் உட்கொண்டு விட்டோம். "பகாசுர குடிநீர் "என்று கணவர் அடிக்கடி குறிப்பிடும் கபசுர குடிநீர் பாக்கெட் இன்னும் பிரிக்கப்படவில்லை.அதை எப்போது குடிப்பது என்பதுதான் கேள்விக்குறி !

மனதில் பயமும் கவலையும் நிரம்பி இருக்கும் இந்த வேளையில்,நமக்கு கை கொடுப்பவர் கடவுள் ஒருவர் மட்டும்தான்.அந்த சக்தியால்தான் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனவிலிருந்து மனிதர்களை காப்பாற்றமுடியும் .எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்.🙏



 



Friday, 19 June 2020

"Caw,  Caw ", I can hear the crow's raucous voice at the crack of dawn. As I get up and make my way towards the kitchen, i can see him perched on the veranda sill, his head leaning inside the grill, cocked to one side. He is looking around to see if there is any sign of life inside.He has established himself firmly in that place, waiting in earnest for the bowl of water, that I religiously place every day on the sill for him and his companions.His continuous cawing invites a few more and as they sit on the rod near the sill waiting for their turn, he dips his beak in the water. The others follow one by one and quench their thirst.

It is breakfast time and I can hear his intermittent cry as he waits patiently.I place a small amount of idli or roti or bread and he will pick them up one by one, dip in the water and swallow.Thus well satiated, he will fly away to come back for lunch! Sometimes he is alone and other times there are few more. But these are the same crows that visit every day. At times, I have even observed them flying  down and dipping themselves wholly in the pot of water. The heat must be unbearable and they are unable to find a waterbed nearby.


                                                           
                                                                                                         
                                                             
Lunch time is strictly between 12 and 1. As I concentrate on my prayers, I can see him from the corner of my eyes, arriving early and parking himself in his place.He must be hungry and restlessly moves his head in all directions looking for food. Disturbed by his continuous cawing, I tell him to wait for a few minutes more. He understands my language. He waits patiently till I finish. He doesn't  move even when I go near him and place the ladle of rice and dal on the sill. He knows I mean no harm. In all these months of familiarity, a sort of camaraderie has developed between us. I wait and watch him pecking a little and then making way for the others to have their share. As they fly away, he devours the last morsel which is left. Then he takes a few sips of water, looks at me and flies away. Probably he is thanking me for the food. I fill up the almost empty pot and walk away. Now and then a few of them would fly down for the water during the rest of the day, sometimes creating a racket with all the din and noise of their cawing.

By sunset they have disappeared. I suppose they must have retired in the nests in the neem tree.The day has ended and I expect to hear him next day.Watching the crow everyday is an amazing experience. I am awestruck at their communication skills with each other, their intelligence and their quality of sharing. How disciplined the crow is to arrive at the same time every day.

Saturday, 18 May 2019

Chachavin Roja

1964 மே 27 - மறக்கமுடியாத நாள் .தாத்தா, ரேடியோ அருகில் உட்கார்ந்து,ஆங்கில செய்திகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்.கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.அவர் மிகவும் நேசித்த,மதிப்பிற்குரிய தலைவர் திடீரென்று காலமாகிவிட்டார்.அன்று காலையில் டெல்லியில், பிரதமர் பண்டிட் ஜவாஹர்லால் நேரு மாரடைப்பால் இறந்துவிட்டார் என்ற செய்தி ஒலிபரப்பாகி கொண்டிருந்தது.

நம்பவே முடியவில்லை.நாங்கள் அப்போது டெஹ்ராடூனில் இருந்தோம்.எனக்கு அப்போது பத்து வயது இருக்கும்.அதற்கு முதல் நாள் மாலையில் தான் நான் தாத்தாவுடன் எங்கோ சென்றுகொண்டிருந்தேன்.சரியாக ஞாபகம் இல்லை.ஆனால் இன்று கூட அன்று நடந்தது பசுமையாக நினைவில் இருக்கிறது.அழகான,பச்சை பசேல் என்ற ஏதோ ஒரு சாலையில், நானும் தாத்தாவும் நடந்துகொண்டிருந்தோம்.இப்போதுபோல் சாலையில் ஒரு நெரிசலும் இல்லை.ஜனங்களின் நடமாட்டமும் அதிகம் இல்லை.அப்போது ஒரு ஜீப்பில் ஐந்தாறு போலீஸ்காரர்கள் வந்து இறங்கினார்கள்.சாலையில் நடப்பவர்களை ஒரு ஓரமாக நிற்க சொன்னார்கள்.அங்கும் இங்கும் செல்லும் ஓரிரண்டு வாகனங்களையும் ஓரங்கட்டினார்கள்.காரணம், நமது பிரதமர் ஜவாஹர்லால் நேரு அந்த வழியாக செல்வதால் இந்த ஏற்பாடு.தாத்தா மிகவும் ஆவலுடன் என் கையை பிடித்துக்கொண்டு நடைபாதையில் நின்றுகொண்டிருந்தார் . "நன்றாக பார்.பண்டிட்ஜி வரப்போகிறார்"என்றார். பத்து நிமிடங்களில் ஒரு சிறிய கூட்டமே எங்கள் பக்கம் சேர்ந்து விட்டது. பெரியவர்கள்,குழந்தைகள் என்று ஒரே சலசலப்பு.

நிதானமாக நாலைந்து வண்டிகள் எங்களை தாண்டி சென்றன.தூரத்தில் வந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய படகு போன்ற காரை எல்லோரும் ஆவலாக எதிர்நோக்கினர்.ஜனங்கள் குழுமி இருப்பதை பார்த்து , மெதுவாக அந்த கார் நாங்கள் இருந்த இடத்தின் முன் நின்றது. கதவை இருவர் திறக்க, மெதுவாக இறங்கினார் நேருஜி.அவரை பார்த்து எல்லோரும் பரவசமடைந்தனர். என்னால் நம்பவே முடியவில்லை.போட்டோவில் பார்த்தது போலவே வெள்ளை sherwani, அதில் ஒரு அழகிய சிவப்பு ரோஜா,வெள்ளை தொப்பி !!.தாத்தா அவரை பற்றி எவ்வளவு கதைகள் சொல்லி இருக்கிறார்! ஆனந்தத்தில் தாத்தா கை கூப்பி நின்றார்.நேருஜியும் அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் கை கூப்பி நமஸ்தே என்றார்.தாத்தாவிற்கு மிக அருகில் வந்து புன்னகைத்தார்.எப்போதும் போல் தாத்தா,கம்பீரமாக வெள்ளை பஞ்சகச்சம்,ஷர்ட், அங்கவஸ்திரம் என்று ஒரு மரியாதைக்குரிய தோற்றத்தில் இருந்தார். யாரோ ஒரு பெரியவர்,அவருக்கு ஒரு மலர் செண்டு கொடுக்க, பண்டிட்ஜி அதில் இருந்த ரோஜாக்களை எடுத்து ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுத்து கன்னத்தை தட்டினார்.எனக்கும் அந்த பாக்கியம் கிடைத்தது. ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு மீண்டும் காரில் ஏறினார்.

தாத்தாவிற்கு படபடப்பு அடங்க வெகு நேரம் பிடித்தது. எனக்கும்தான்.வழியெல்லாம் அவரைப்பற்றி பேசிக்கொண்டே வந்தார்.வீட்டிற்கு சென்றதும் ஒரு குட்டி ப்ரவசனமே நடத்தினார்.அம்மாவும் பாட்டியும் ஆச்சரியப்பட்டார்கள்.அவர்களால் நம்பமுடியவில்லை.ஆனால் என் கையில் இருந்த ரோஜாவே சாட்சி. அந்த அழகான சிவப்பு ரோஜாவை,சாச்சா நேருவின் கைகளால் வாங்கியதை, என் தோழிகளுக்கு காட்டவேண்டும் என்று நான் துடித்துக்கொண்டிருந்தேன்.நாட்டின் பிரதம மந்திரியை, இத்தனை அருகில், கெடுபிடி இல்லாமல் பார்ப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்.

அடுத்த நாளே,  டெல்லிக்கு போனபின், மாரடைப்பால் அவர் காலமான செய்தி வந்தது. முதல் நாள் அவரை பார்த்த சந்தோஷம், மறு நாளே துக்கமாக மாறிவிட்டது. பல வருடங்களுக்குப்பிறகு நினைத்துப்பார்த்தால் கூட அது ஒரு சாதாரணமான விஷயமாக தோன்றவில்லை.எவ்வளவு பெருமைக்குரிய நிகழ்வு! எவ்வளவு சாதாரணமாக ஒரு பிரதம மந்திரி, மக்களுடன் கலந்து சிரித்து போனார் ! இன்று அதெல்லாம் வெறும்  ஒரு கனவுதான்.    






    





       







    





      






        







               

Friday, 8 September 2017

En Mudhal English Teacher

ஆசிரியர் தினம் வந்தால்,என் ஞாபகத்திற்கு முதலில் வருவது என்னுடைய ட்யூஷன் டீச்சர்,  Mrs.E. Gray தான்.டெல்லியில் இரண்டாம் கிளாஸ் வரை தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு,டெஹ்ராடூனில் இங்கிலீஷ் மீடியம் கான்வென்ட் ஸ்கூலில் சேர்ந்தபோது,ஒரு வார்த்தை இங்கிலீஷ் பேசத்தெரியாமல் திண்டாடிப்போனேன்.அந்த சிறிய வயதில்,தமிழும் ஹிந்தியும் மட்டுமே தெரிந்த எனக்கு,பள்ளிக்கூடம் ஒரு சவாலாக இருந்தது.மிகவும் அன்பான என் கிளாஸ் டீச்சர்,எனக்கு நிதானமாக பாடங்களை புரியவைத்தார்.அவர் சிபாரிசின்படிதான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள அவர் உறவினரான Mrs.Gray யிடம் போய் சேர்ந்தேன்.

வயதான பாட்டி அவர்.பாப் செய்யப்பட்ட நரைமுடியும், frockம்மாக, சற்று கூனியபடி நடப்பார்.முதல் நாளே அவர் அன்புடன் என்னை அணைத்து வரவேற்த்தது இப்பவும் ஞாபகம் இருக்கிறது.எத்தனை கனிவான முகம்!ஸ்கூல் முடிந்ததும் tongaகாரர் (குதிரை வண்டி )டீச்சர் வீட்டில் கொண்டுவிட்டு வாசலில் காத்திருப்பார்.பாடம் முடிந்ததும் வீட்டில்  கொண்டுவிடுவார்.இது வாரத்தில் 5 நாட்கள் நடக்கும். 

அந்த குட்டி வீட்டின் வாசலில் சிறிய அழகிய தோட்டம் இருக்கும்.பாட்டியின் இரண்டு பிள்ளைகள்,மருமகள்,குழந்தைகள் என்று பெரிய குடும்பம்.அவர்கள் ஆங்கிலோ இந்தியர்கள் ஆகையால் தஸ், புஸ் என்று ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டு இருப்பார்கள்.தோட்டத்தின் ஒரு மரத்தடியில்தான் பெரும்பாலும் எனக்கு பாடம் நடக்கும்.மிகவும் ரம்யமான ஒரு சூழ்நிலை.டீச்சர் எப்படி சொல்லிக்கொடுத்தார் என்று ஞாபகம் இல்லை.ஆனால் மூன்று மாதத்தில் நான் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றது உண்மை ! என் கிளாஸ் டீச்சர் ஆச்சரியப்படும் அளவுக்கு எழுத்திலும் பேச்சிலும் மிகவும் தேறி விட்டேன்.


இந்த பாடங்கள் மத்தியில்,என் நினைவிலிருந்து நீங்காத இன்னொரு விஷயமும் உண்டு.தினமும் டீச்சர், ஒரு பழைய, துரு பிடித்த பிஸ்கட் டின்னிலிருந்து ஒரு பெரிய கேக் துண்டை எனக்கு கொடுப்பார்.நான் அதை ருசித்து உண்பேன்.வீட்டில் செய்த அந்த கேக் அவ்வளவு சுவையாகவும்,மணமாகவும் இருக்கும்.ஒரு நாள் கூட தவறாமல் டீச்சர் என்னை கேக் சாப்பிட வைத்துவிட்டுதான் பாடம் எடுப்பார்.அந்த கேக்குக்காக தான் டியூஷன் படிக்க போனேனோ என்று இப்போது தோன்றுகிறது!

இரண்டு மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் டீச்சர் இறந்துவிட்டதாக அப்பாவிற்கு செய்தி வந்தது.அன்று நான் அழுதது பார்த்து என் பெற்றோர்களே கலங்கி விட்டனர்.டீச்சர் என் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு போயிருக்கிறார்!என் ஆங்கில அறிவின் விதை விதைத்தது என் அருமை Gray டீச்சர் தானே !            


                    

Friday, 14 April 2017

vidumarai ninaivugal

சிறு வயதில் கோடை விடுமுறை என்றால் அது தஞ்சாவூருக்கு தான்.டெஹ்ராடூனிலிருந்து டெல்லி ,பிறகு சென்னை - தஞ்சாவூர் என்று மிக நீண்ட ரயில் பயணம் .ஒருவழியாக ஊரை சென்றடையும்போது, ரயிலின்  கரி உடம்பில் ஒட்டியிருக்கும் !வடக்கிலிருந்து வரும் எங்களுக்கு தஞ்சாவூரில் தாத்தா பாட்டியின் அமைதியான வீட்டில் விடுமுறையை கழிப்பது ,வித்தியாசமான  அனுபவமாக இருக்கும் .

தஞ்சாவூர் என்றாலே  கதம்ப வாசனையின் மணம். மனதை நிரப்பும்.அந்த வயதில் என்னவென்று புரியாத அந்த வாசனை மிகவும் பிடிக்கும்.ஸ்டேஷனுக்கு எங்களை அழைக்க மாட்டு வண்டியோடு குமாரனோ, முருகனோ (பெயர் ஞாபகம் இல்லை) வருவான். .  அதைப்பார்த்து நானும் தம்பியும் அலறுவோம் !மேடு பள்ளத்தில் போகும்போது டங் டங் என்று தலையில் இடிக்கும்  அதன் கூரை .கீழே மெத்தென விரித்திருக்கும் வைக்கோல், காலை அரிக்கும். ஆனால் எங்களை சௌகரியமாக வண்டிக்குள்ளே   உட்காரவைத்து ,அன்பாக அழைத்துப்போவான் அவன்! அரை மணி நேர ,வேதனையான பயணம். கோடியில் வரும்போதே,தாத்தாவிற்கு தெரிந்துவிடும்.வாசல்  கேட்டில் தயாராக நின்றிருப்பார்.பாட்டி  குஞ்சாக அவர் பக்கத்தில் ஆர்வத்துடன் எங்களை அழைக்க காத்திருப்பாள்.

நாங்கள் அவிழ்த்து விட்ட நாய்க்குட்டிகள் போல் வீட்டை  சுற்றி அங்கும் இங்கும் ஓடுவோம் .டெல்லியின் குட்டி வீடு இல்லையே இது ?எவ்வளவு பெரியது  ? சுற்றிலும் பெரிய தோட்டம்,பலவித மரங்கள்,கிணறு , தோய்க்கும் கல்,தண்ணீர் தொட்டி, ஊஞ்சல் என்று எல்லாம் எங்களை  உற்சாகமாக்கிவிடும்..எனக்கு மிகவும் பிடித்த,நான் பிறந்த அறை அங்கே தானே இருந்தது!என்  சந்தோஷத்திற்கு எல்லையே இருக்காது.

பாட்டியின் கைமணம் எதுவாக இருந்தாலும்  சாப்பிடத்தூண்டும்.எல்லாம் தோட்டத்திலிருந்து பறித்த organic  காய்கறிகள் ஆயிற்றே!  கீரை,மணத்தக்காளி, பச்சை மிளகாய்,தக்காளி,சுண்டைக்காய் என்று ஒவ்வொரு செடியிலிருந்து பறித்து பாட்டிக்கு கொண்டு கொடுப்பது மிகவும் பிடித்த வேலை.செடிகளின் அற்புத சிருஷ்டி வியக்கவைக்கும்.அதி காலையில் எழுந்து,வாசலில் பாட்டி பெரிய கோலம் போடுவதையும்,பால்காரன் பால் கறப்பதையும் பார்ப்பது தினசரி  பொழுதுபோக்கு.

தாத்தா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் .ஒருமணி நேரம் கணக்கு,சயின்ஸ் என்று ஏதாவது படிக்கவேண்டும்.கையெழுத்து அழகாக இருக்க copy எழுதச்சொல்லுவார்.கட்டாயத்தின் பெயரில் அவசரமாக எழுதி முடித்து, பின்பக்கம் கிணற்றங்கரையில் விளையாட சென்றுவிடுவோம்.தம்பி ஏதாவது ஒரு மரத்தில் பரபரவென்று ஏறி உட்கார்ந்துவிடுவான்.தாத்தா வீட்டு   பலாப்பழம் பிரசித்தம்.மிகவும் தித்திப்பாக இருக்கும்.lichi  ல் வளர்ந்த நாங்கள்,பலாப்பழத்தை ரசித்து சாப்பிடுவோம்.தாத்தா தரையில் உட்கார்ந்து,எண்ணெய் தடவிய கைகளால் பழத்தை வெட்டி,சுளைகளை எடுக்கும்போதே நாவில் ஜலம்   ஊறும்.தேனை தொட்டு வாயில் போடும்போது,அதன் சுவையே தனிதான். 

வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று அந்த தெரு வீடுகளில் தடபுடலான வரவேற்பு ! அதுவும் சரளமாக இங்கிலிஷ்,ஹிந்தி பேசுகிறோமே என்று எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள்.லீவின் பாதிப்பொழுது கோடி வீட்டு வக்கீல் மாமா குழந்தைகளுடன் கழியும்.கோலி,பம்பரம்,பாண்டி என்று அவர்களுடன் சரிக்கு சரியாக விளையாடுவோம்.பல்லாங்குழி கற்றுக்கொண்டது அங்குதான்.அவர்கள் தோட்டத்தில் பச்சை கம்பளம் விரித்தாற்போல் அறிநெல்லிக்காய் விழுந்துகிடக்கும்.கை நிறைய அள்ளி அலம்பி,ஒவ்வென்றாக வாயில் போட்டு மெல்லும்போது அனுபவிக்கும் அந்த சுவையை வர்ணிக்கமுடியாது.

வாரத்தில் இரண்டு நாட்கள் தவறாமல் அம்மாவுடன் ப்ரஹதீஸ்வரர் கோவிலில் பொழுது கழியும். அதிக கூட்டமில்லாத,மிக  பிரம்மாண்டமான அந்த கோவிலினின் பிரகாரத்தை சுற்றி ஓடியாடி விளையாடி பொழுதை கழித்தது பசுமையாக நினைவிருக்கிறது.வீடு திரும்ப மனசே வராது.

ஒன்றரை மாதம் போனதே தெரியாமல் விடுமுறை முடிந்து விடும்.கிளம்பும்போது,தாத்தா எல்லோர் தலையிலும் கொத்து வேப்பிலையை சொருகி விடுவார்.  ஸ்டேஷனில் உள்ள குட்டிப்பிள்ளையார் கோவிலில் பிரார்த்திட்டுவிட்டு வண்டி ஏறுவோம். மனதில் உற்சாகமும் சந்தோஷமும் நிரம்பி  ஊர் திரும்புவோம். கவலை இல்லாமல்,கட்டுப்பாடு இல்லாமல் கழித்த அந்த விடுமுறை எங்கே? கோச்சிங் கிளாஸ், பலவிதமான camp, ipad என்று விடுமுறை நாட்களை கழிக்கும் இந்த கால குழந்தைகளுக்கு, அந்த நாட்களை மீட்டுத்தர முடியுமா என்று ஒரு  ஆதங்கம் இருந்துகொண்டே இருக்கிறது.



Thursday, 9 February 2017

Oru Payanam

நாத்தனார் கணவரும்,நாத்தனாரும் பத்து நாட்களுக்குமுன் கனடாவிலிருந்து பேசியபோது மனது மிகவும் உற்சாகம் அடைந்தது.பழைய சிரிப்பும் உற்சாகமும் அவர்கள் குரலில் இழைந்தோடியது.இந்த மிக சந்தோஷமான கணங்களுக்கு,கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது?சில மாதங்களுக்குமுன் நடந்த சம்பவங்களெல்லாம் மனதில் படம் போல் ஓடியது.

மிக ஆவலுடன் எதிர்பார்த்த அந்த பயணம்!நாத்தனார்,அவள் கணவர்,மைத்துனர்,அவர் மனைவி, கணவர்,நான் என ஆறு பேரும் மிக  உற்சாகமாக அந்த பயணத்தை தொடங்கினோம்.சென்னை விமானநிலையத்தில்,சிறு குழந்தைகள் போல் சந்தித்தோம் இந்த சீனியர் சிட்டிசன்கள்! (மைத்துனர் மனைவி சிறியவள்).சில நாட்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக  பொழுதை கழிப்பதுதான் எங்கள் நோக்கம்.திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமியின் திவ்ய தரிசனத்துடன் ஆரம்பித்தது எங்கள்  பிரயாணம்.மனதில் அசாதாரண அமைதி.என்றென்றும் ஒற்றுமையாக,அன்புடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை.அடுத்த நாள் கன்னியாகுமரிக்கு புறப்படுமுன் breakfast சாப்பிட,  dining hall க்கு சென்றோம்.அங்கு ஒரு சிறிய படி இருந்ததால்,என்னை கவனித்து நடக்கச்சொன்னார் என் அருமை நாத்தனார்.தடுக்கி விடப்போகிறது என்று எச்சரித்தாள் .நானும் கவனமாக சிற்றுண்டியுடன் உட்காரப்போனேன்.தடால் என்று ஒரு சத்தம்!ஒரு கணம் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.தரையில் பலகாரங்கள் சிதறிக்கிடக்க,நாத்தனார் வலியில் துடித்துக்கிடந்தாள் .என்னை எச்சரித்தவள்,கணப்பொழுதில் தானே விழுந்துவிட்டாள்.அதிர்ச்சியில் உறைந்துபோனோம். 

சட்டென்று நானும் ஓர்ப்படியும், பரபரவென்று செயலில் இறங்கினோம்.பக்கத்தில் வெண்ணை கிண்ணத்தில் இருந்த ஐஸ் கட்டிகள்,tissue வால் நெற்றியிலிருந்து வழிந்துகொண்டிருந்த ரத்தத்தை கட்டுப்படுத்தினோம்.அவளை தூக்க சென்றவர்களிடம் கையை தொடவேண்டாம் என்றாள்.கையில் பலத்த அடி பட்டிருந்தது தெரிந்தது.ஹோட்டல் மேனேஜர் மற்றும் ஊழியர்கள் அவளை மெதுவாக wheel chair ல் உட்காரவைத்து தள்ளிக்கொண்டே பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றோம்.காலை வேளையாக இருந்ததால் அதிகம் கூட்டம் இல்லை.உடனேயே first aid கொடுத்து, xray யும் எடுத்தார்கள். எலும்பியல் டாக்டர் பார்த்து அவள் தோள் பட்டை விலகியிருப்பதாக சொன்னார்.உடனே அதை சரி செய்யப்போவதாகவும் சொன்னார்.அத்தனை வலியையும்   நாத்தனார் பொறுமையாக சகித்துக்கொண்டிருந்தாள்.  அதையும் மீறி,சர்க்கரை நோயாளிகளான தன் இரு சகோதரர்களும் ஒன்றும் சாப்பிடவில்லையே என்று கவலைப்பட்டு,இருவரையும் சாப்பிட்டு வருமாறு வற்புறுத்தினாள்.அந்த க்ஷணம் என் மாமியாரே வந்து விட்டார் போல் தோன்றியது.அவரும் இப்படித்தானே சொல்லியிருப்பார்!

ஒரு வழியாக டாக்டர் சிகிச்சையை  முடித்தார்.அந்த பயங்கர வலியை தாங்கிக்கொள்ளும் சக்தியை கடவுள் தான் அவளுக்கு கொடுத்திருப்பார்.சென்னைக்கே திரும்பிவிடலாமா என்று கூட நாங்கள் யோசித்தோம்.ஆனால் அவள் மறுத்துவிட்டாள்.வலது கையில் sling உடன்  இருந்த அவளுடன் எங்கள் பயணம் தொடர்ந்தது.கன்யாகுமரியில் நாத்தனார் கணவருக்கு கடுமையான ஜுரம் வந்துவிட்டது.அவருக்கு சிகிச்சை அளித்துக்கொண்டே, நாங்கள் ஊரெல்லாம் சுற்றிப்பார்த்தோம்.பிறகு மதுரை,தஞ்சாவூர்,கும்பகோணம் என்று ஒரு வழியாக பயணம் முடிவடைந்தது.இத்தோடு நிற்காமல்,கனடா சென்றடைந்த சில மணி நேரங்களில்,நாத்தனார் கணவர் கீழே விழுந்து,ஆஸ்பத்திரியில் மயக்க நிலையில் admit ஆகி,கவலைக்கிடமானது அறிந்து மிகவும் பதறி விட்டோம்.ஒரு   வாரத்தில் அவரும் குணமாகி
வீட்டிற்கு வந்து சேர்ந்து,படிப்படியாக தேறி வருகிறார்.
 
இந்த பதிவில் நடந்தவற்றை விட,அதனால் என்ன புரிந்தது என்பது முக்கியம்.நடக்கும் ஒவ்வொரு துன்பத்திலும் ஒரு இன்பம் ஒளிந்திருக்கிறது.கீழே விழுந்த நாத்தனார்,ஒவ்வொருவரின் அன்பிலும் பாசத்திலும் தன வலியை மறந்து போனாள்.இத்தனை நடந்தும் எங்கள் பயணம் மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தது.எல்லோரும் சேர்ந்து ஒருத்தருக்கொருத்தர்  உதவி செய்து கொண்டுஇருப்பதில் எவ்வளவு சந்தோஷம்!சுற்றி உட்கார்ந்து,பழைய நினைவுகளை அசை போடும்போது கிடைக்கும் சந்தோஷம் அளவில்லாதது.இந்த விபத்திற்கு பிறகு எங்கு சென்றாலும் முதலில் மைத்துனர்,பின் நாங்கள் பெண்கள் பிறகு இரு ஆண்கள் என்று செல்லும்போது, இவர்களால் நமக்கு எவ்வளவு பாதுகாப்பு என்ற நன்றி உணர்ச்சி! உயரமான மைத்துனர், படி,படி என்று எங்கு படி இருந்தாலும் எச்சரிக்கை செய்து கொண்டே போகும் அழகு!பாசத்திலும் அன்பிலும் கறைந்துதான் போனோம் ! இந்த ஜென்மத்தில் நமக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கொடுத்த கடவுளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது குறைவு தான் !                            

  



           

Sunday, 30 October 2016

Oru Viradham

இரண்டு வாரங்களுக்குமுன் "karvachauth" - வட மாநிலங்களில் பெண்கள் தங்கள் கணவருக்காக விரதம் இருக்கும் பண்டிகை.ஒருமாதம் முன்பே, beauty parlour, மெஹந்தி காரர்கள் என்று எல்லோரும் discount கொடுப்பதாக எல்லா இடங்களிலும் அறிவிப்பு விட்டார்கள்.அகல் விளக்குக்கும் எலுமிச்சை பழத்திற்கும் ஒரே டிமாண்ட்.

காலையில் இருந்தே பெண்கள் facebook ல்   மிகவும் பிஸியாக இருந்தார்கள்.ஒருத்தருக்கொருத்தர் லைட்டாக பழம்,ஜூஸ் என்று என்ன சாப்பிடவேண்டும் என்று டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர்.நாள் முழுக்க பட்டினி கிடக்க முடியாதே!குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு,அங்கும் இங்கும் பல பெண்கள் போய்க்கொண்டிருந்தனர்.எல்லாம் beauty parlour க்கும்,மெஹந்தி இட்டுக்கொள்வதற்கும் தான்!ஆங்காங்கே மெஹந்தி காரர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.பாவம்,கணவர்கள் பாடு திண்டாட்டம்தான்போலும் !டீ ,காபி,cereal என்று சாப்பிட்டுவிட்டு வேலைக்கு போய்விட்டார்கள்.அவர்களுக்காக மனைவிகள் நாள் முழுவதும் விரதம் இருக்கிறார்களே!! சில கூஜா போடும் கணவர்கள் தன் பங்கிற்கும் விரதம் இருந்தார்கள்.

மாலை நாலு மணிக்கு மேல் பார்த்தால்,அரை பாண்ட்,முக்கால் பாண்ட் பெண்கள்,அடையாளமே தெரியாதபடி,புடவை,காக்ரா சோளி,மேக்கப் என்று உருமாறி விட்டார்கள்.கிளப் ஹவுசில் கல்யாணக்களை கட்டிவிட்டது.ஹால் நிறைய சிரிப்பும், பேச்சுமாக அழகழகான பெண்கள்.ஹிந்தி பாட்டிகளெல்லாம், ஜிமிக்கி அணிந்து, பளபள உடைகளில் தள்ளாடியபடி வந்தார்கள்.இன்று அவர்களுக்கு முக்கியத்துவம் வந்து விட்டது.மூத்த பாட்டிகள் தட்டுத்தடுமாறி மெதுவாக ஸ்டேஜில் ஏறி, சேரில் உட்கார்ந்துகொண்டு, மைக்கில் ஸ்லோகம் சொல்லியபடி, பூஜை செய்தார்கள்.கீழே உட்கார்ந்திருந்த அத்தனை பெண்களும் பக்தியோடு,அப்படியே அதை பார்த்து செய்தனர்.

பூஜை முடிந்து, அலங்காரபூஷிணிகள்,  மெல்லமெல்ல ,அன்னநடையாக நடந்து போனார்கள்.ஒரு கையில் பிரசாத தட்டு,நடுவில் எலுமிச்சையில் ஏற்றிய விளக்கு,இன்னொரு கையால் தடுக்கும் புடவையை பிடித்துக்கொண்டு மிக கவனமாக சென்றார்கள்.

இருட்டியபிறகு,நூற்றுக்கு மேலான இத்தனை பெண்களும்,மைதானத்தில் கையில் ஜல்லடையுடன் சந்திரனை பார்க்க காத்திருந்தார்கள்.சந்திரனோ,மேகங்களிடையே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தார்.ஜல்லடை வழியாக சந்திரனை பார்த்தபின்,தண்ணீர் அருந்தி விரதத்தை முடிக்கவேண்டும்.பிறகு கணவரை வணங்கி,அவருடன் சேர்ந்து உணவருந்தவேண்டும்.கூட்டம் கலகல என்று இருந்தது.கணவர்கள் ,குழந்தைகள் என்று அந்த காட்சியை பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.Jogging போய்க்கொண்டிருந்த இரண்டு வெள்ளைக்காரர்கள்,அந்த பெரும் கூட்டத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.எல்லோரையும் போல் ஆகாயத்தை நோக்கிய அவர்கள்,ஒன்றும் புரியாமல் புன்னகையுடன் சென்றனர்.

எனக்கு இந்த விரதங்களில் நாட்டமும் கிடையாது,நம்பிக்கையும் கிடையாது.இதனால் பலன் கிடைக்குமா என்றும் தெரியாது.ஆனால் இந்த காலத்தில்,இவ்வளவு modern பெண்கள் இதை செய்யும்போது,அது ஒரு social activity க்காக என்றாலும்,பலர் அதில் நம்பிக்கை வைத்து செய்வதாக தோன்றுகிறது.ஒவ்வொரு கல்யாணத்தையும் தக்க வைத்துக்கொள்ள பாடுபடும் இந்த தருணத்தில்,இந்த விரதம் ஒரு நல்ல விஷயமாகப்படுகிறது.