Thursday, 9 February 2017

Oru Payanam

நாத்தனார் கணவரும்,நாத்தனாரும் பத்து நாட்களுக்குமுன் கனடாவிலிருந்து பேசியபோது மனது மிகவும் உற்சாகம் அடைந்தது.பழைய சிரிப்பும் உற்சாகமும் அவர்கள் குரலில் இழைந்தோடியது.இந்த மிக சந்தோஷமான கணங்களுக்கு,கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது?சில மாதங்களுக்குமுன் நடந்த சம்பவங்களெல்லாம் மனதில் படம் போல் ஓடியது.

மிக ஆவலுடன் எதிர்பார்த்த அந்த பயணம்!நாத்தனார்,அவள் கணவர்,மைத்துனர்,அவர் மனைவி, கணவர்,நான் என ஆறு பேரும் மிக  உற்சாகமாக அந்த பயணத்தை தொடங்கினோம்.சென்னை விமானநிலையத்தில்,சிறு குழந்தைகள் போல் சந்தித்தோம் இந்த சீனியர் சிட்டிசன்கள்! (மைத்துனர் மனைவி சிறியவள்).சில நாட்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக  பொழுதை கழிப்பதுதான் எங்கள் நோக்கம்.திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமியின் திவ்ய தரிசனத்துடன் ஆரம்பித்தது எங்கள்  பிரயாணம்.மனதில் அசாதாரண அமைதி.என்றென்றும் ஒற்றுமையாக,அன்புடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை.அடுத்த நாள் கன்னியாகுமரிக்கு புறப்படுமுன் breakfast சாப்பிட,  dining hall க்கு சென்றோம்.அங்கு ஒரு சிறிய படி இருந்ததால்,என்னை கவனித்து நடக்கச்சொன்னார் என் அருமை நாத்தனார்.தடுக்கி விடப்போகிறது என்று எச்சரித்தாள் .நானும் கவனமாக சிற்றுண்டியுடன் உட்காரப்போனேன்.தடால் என்று ஒரு சத்தம்!ஒரு கணம் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.தரையில் பலகாரங்கள் சிதறிக்கிடக்க,நாத்தனார் வலியில் துடித்துக்கிடந்தாள் .என்னை எச்சரித்தவள்,கணப்பொழுதில் தானே விழுந்துவிட்டாள்.அதிர்ச்சியில் உறைந்துபோனோம். 

சட்டென்று நானும் ஓர்ப்படியும், பரபரவென்று செயலில் இறங்கினோம்.பக்கத்தில் வெண்ணை கிண்ணத்தில் இருந்த ஐஸ் கட்டிகள்,tissue வால் நெற்றியிலிருந்து வழிந்துகொண்டிருந்த ரத்தத்தை கட்டுப்படுத்தினோம்.அவளை தூக்க சென்றவர்களிடம் கையை தொடவேண்டாம் என்றாள்.கையில் பலத்த அடி பட்டிருந்தது தெரிந்தது.ஹோட்டல் மேனேஜர் மற்றும் ஊழியர்கள் அவளை மெதுவாக wheel chair ல் உட்காரவைத்து தள்ளிக்கொண்டே பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றோம்.காலை வேளையாக இருந்ததால் அதிகம் கூட்டம் இல்லை.உடனேயே first aid கொடுத்து, xray யும் எடுத்தார்கள். எலும்பியல் டாக்டர் பார்த்து அவள் தோள் பட்டை விலகியிருப்பதாக சொன்னார்.உடனே அதை சரி செய்யப்போவதாகவும் சொன்னார்.அத்தனை வலியையும்   நாத்தனார் பொறுமையாக சகித்துக்கொண்டிருந்தாள்.  அதையும் மீறி,சர்க்கரை நோயாளிகளான தன் இரு சகோதரர்களும் ஒன்றும் சாப்பிடவில்லையே என்று கவலைப்பட்டு,இருவரையும் சாப்பிட்டு வருமாறு வற்புறுத்தினாள்.அந்த க்ஷணம் என் மாமியாரே வந்து விட்டார் போல் தோன்றியது.அவரும் இப்படித்தானே சொல்லியிருப்பார்!

ஒரு வழியாக டாக்டர் சிகிச்சையை  முடித்தார்.அந்த பயங்கர வலியை தாங்கிக்கொள்ளும் சக்தியை கடவுள் தான் அவளுக்கு கொடுத்திருப்பார்.சென்னைக்கே திரும்பிவிடலாமா என்று கூட நாங்கள் யோசித்தோம்.ஆனால் அவள் மறுத்துவிட்டாள்.வலது கையில் sling உடன்  இருந்த அவளுடன் எங்கள் பயணம் தொடர்ந்தது.கன்யாகுமரியில் நாத்தனார் கணவருக்கு கடுமையான ஜுரம் வந்துவிட்டது.அவருக்கு சிகிச்சை அளித்துக்கொண்டே, நாங்கள் ஊரெல்லாம் சுற்றிப்பார்த்தோம்.பிறகு மதுரை,தஞ்சாவூர்,கும்பகோணம் என்று ஒரு வழியாக பயணம் முடிவடைந்தது.இத்தோடு நிற்காமல்,கனடா சென்றடைந்த சில மணி நேரங்களில்,நாத்தனார் கணவர் கீழே விழுந்து,ஆஸ்பத்திரியில் மயக்க நிலையில் admit ஆகி,கவலைக்கிடமானது அறிந்து மிகவும் பதறி விட்டோம்.ஒரு   வாரத்தில் அவரும் குணமாகி
வீட்டிற்கு வந்து சேர்ந்து,படிப்படியாக தேறி வருகிறார்.
 
இந்த பதிவில் நடந்தவற்றை விட,அதனால் என்ன புரிந்தது என்பது முக்கியம்.நடக்கும் ஒவ்வொரு துன்பத்திலும் ஒரு இன்பம் ஒளிந்திருக்கிறது.கீழே விழுந்த நாத்தனார்,ஒவ்வொருவரின் அன்பிலும் பாசத்திலும் தன வலியை மறந்து போனாள்.இத்தனை நடந்தும் எங்கள் பயணம் மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தது.எல்லோரும் சேர்ந்து ஒருத்தருக்கொருத்தர்  உதவி செய்து கொண்டுஇருப்பதில் எவ்வளவு சந்தோஷம்!சுற்றி உட்கார்ந்து,பழைய நினைவுகளை அசை போடும்போது கிடைக்கும் சந்தோஷம் அளவில்லாதது.இந்த விபத்திற்கு பிறகு எங்கு சென்றாலும் முதலில் மைத்துனர்,பின் நாங்கள் பெண்கள் பிறகு இரு ஆண்கள் என்று செல்லும்போது, இவர்களால் நமக்கு எவ்வளவு பாதுகாப்பு என்ற நன்றி உணர்ச்சி! உயரமான மைத்துனர், படி,படி என்று எங்கு படி இருந்தாலும் எச்சரிக்கை செய்து கொண்டே போகும் அழகு!பாசத்திலும் அன்பிலும் கறைந்துதான் போனோம் ! இந்த ஜென்மத்தில் நமக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கொடுத்த கடவுளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது குறைவு தான் !                            

  



           

No comments:

Post a Comment