Friday, 8 September 2017

En Mudhal English Teacher

ஆசிரியர் தினம் வந்தால்,என் ஞாபகத்திற்கு முதலில் வருவது என்னுடைய ட்யூஷன் டீச்சர்,  Mrs.E. Gray தான்.டெல்லியில் இரண்டாம் கிளாஸ் வரை தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு,டெஹ்ராடூனில் இங்கிலீஷ் மீடியம் கான்வென்ட் ஸ்கூலில் சேர்ந்தபோது,ஒரு வார்த்தை இங்கிலீஷ் பேசத்தெரியாமல் திண்டாடிப்போனேன்.அந்த சிறிய வயதில்,தமிழும் ஹிந்தியும் மட்டுமே தெரிந்த எனக்கு,பள்ளிக்கூடம் ஒரு சவாலாக இருந்தது.மிகவும் அன்பான என் கிளாஸ் டீச்சர்,எனக்கு நிதானமாக பாடங்களை புரியவைத்தார்.அவர் சிபாரிசின்படிதான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள அவர் உறவினரான Mrs.Gray யிடம் போய் சேர்ந்தேன்.

வயதான பாட்டி அவர்.பாப் செய்யப்பட்ட நரைமுடியும், frockம்மாக, சற்று கூனியபடி நடப்பார்.முதல் நாளே அவர் அன்புடன் என்னை அணைத்து வரவேற்த்தது இப்பவும் ஞாபகம் இருக்கிறது.எத்தனை கனிவான முகம்!ஸ்கூல் முடிந்ததும் tongaகாரர் (குதிரை வண்டி )டீச்சர் வீட்டில் கொண்டுவிட்டு வாசலில் காத்திருப்பார்.பாடம் முடிந்ததும் வீட்டில்  கொண்டுவிடுவார்.இது வாரத்தில் 5 நாட்கள் நடக்கும். 

அந்த குட்டி வீட்டின் வாசலில் சிறிய அழகிய தோட்டம் இருக்கும்.பாட்டியின் இரண்டு பிள்ளைகள்,மருமகள்,குழந்தைகள் என்று பெரிய குடும்பம்.அவர்கள் ஆங்கிலோ இந்தியர்கள் ஆகையால் தஸ், புஸ் என்று ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டு இருப்பார்கள்.தோட்டத்தின் ஒரு மரத்தடியில்தான் பெரும்பாலும் எனக்கு பாடம் நடக்கும்.மிகவும் ரம்யமான ஒரு சூழ்நிலை.டீச்சர் எப்படி சொல்லிக்கொடுத்தார் என்று ஞாபகம் இல்லை.ஆனால் மூன்று மாதத்தில் நான் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றது உண்மை ! என் கிளாஸ் டீச்சர் ஆச்சரியப்படும் அளவுக்கு எழுத்திலும் பேச்சிலும் மிகவும் தேறி விட்டேன்.


இந்த பாடங்கள் மத்தியில்,என் நினைவிலிருந்து நீங்காத இன்னொரு விஷயமும் உண்டு.தினமும் டீச்சர், ஒரு பழைய, துரு பிடித்த பிஸ்கட் டின்னிலிருந்து ஒரு பெரிய கேக் துண்டை எனக்கு கொடுப்பார்.நான் அதை ருசித்து உண்பேன்.வீட்டில் செய்த அந்த கேக் அவ்வளவு சுவையாகவும்,மணமாகவும் இருக்கும்.ஒரு நாள் கூட தவறாமல் டீச்சர் என்னை கேக் சாப்பிட வைத்துவிட்டுதான் பாடம் எடுப்பார்.அந்த கேக்குக்காக தான் டியூஷன் படிக்க போனேனோ என்று இப்போது தோன்றுகிறது!

இரண்டு மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் டீச்சர் இறந்துவிட்டதாக அப்பாவிற்கு செய்தி வந்தது.அன்று நான் அழுதது பார்த்து என் பெற்றோர்களே கலங்கி விட்டனர்.டீச்சர் என் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு போயிருக்கிறார்!என் ஆங்கில அறிவின் விதை விதைத்தது என் அருமை Gray டீச்சர் தானே !            


                    

1 comment: