Saturday, 15 June 2013

Naanum Paattum

என் தாத்தாவிற்கு நான் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விருப்பம்.அவருக்கு சங்கீதத்தில் மிகவும் ஈடுபாடு இருந்தது .என் அம்மாவும் நன்றாக பாடுவார் .நாங்கள் அப்போது எர்ணாகுளத்தில் இருந்தோம் .எனக்கு 14 வயது .சினிமா பாட்டு, அதுவும் ஹிந்தி சினிமா பாட்டில் தான் எனக்கு விருப்பம்  .இருந்தாலும் தாத்தா பேச்சை மீறக்கூடாது என்று சும்மா இருந்தேன்.
        பாட்டு டீச்சர் தேடும் படலம் தொடங்கியது .நான் என்னவோ பெரிய பாடகியாகிவிடுவேன் என்ற நம்பிக்கையில், நல்ல டீச்சரை வலை வீசி தேடினார்கள்,அம்மாவும் தாத்தாவும். நானோ டீச்சர் கிடைக்க கூடாதென்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன் !
        ஒரு வழியாக,அங்கே இங்கே சொல்லி,நல்ல பாட்டு டீச்சர் கிடைத்தார்.ராஜா ரவி வர்மா வம்சத்தில் வந்தவர்.மியூசிக் ஸ்கூலில் சொல்லிக்கொடுப்பவர்.பல மேடை கச்சேரிகள் செய்து புகழ் அடைந்தவர்.நமக்கு அதிர்ஷ்டம்தான் என்று தாத்தாவிற்கு சந்தோஷம்.
        ஒரு நல்லநாளில்,தடபுடலாக என் பாட்டு கிளாஸ் தொடங்கியது.டீச்சர் அழகாக இருந்தார்.கனமான சரீரம்,அதி கனமான சாரீரம்!சரஸ்வதி என்ற பெயருக்கு பொருத்தமாக பிரமாதமாக ஒரு பாட்டு பாடினார்.தேங்காய்,பழம்,பூ,புடவை என தட்டில் வைத்து,டீச்சரை வணங்கி,நல்ல நேரத்தில் துவங்கியது என் இஷ்டமில்லாத பயணம்.
         அந்த காட்சி எப்படி இருந்தது தெரியுமா  ?  நடு ஹாலில் ஒரு மணையில் டீச்சர்,அவர் எதிரில் பாயில் நான்.(ஒரு புலி எதிரில் எலி போல் பயந்து நான் உட்கார்ந்திருந்தேன்).நடுவில் போதாக்குறைக்கு ஒரு புதிய ஸ்ருதி பெட்டி.(தாத்தா அவசரமாக வாங்கியது).ச ரி க ம என்று மெல்ல டீச்சர் ஆரம்பித்தார்.எனக்கு குரல் எழும்பவே இல்லை.எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி?தாத்தா கம்பீரமாக நாற்காலியில் வீற்றிருந்தார்.அம்மா ஒரு பக்கம் நின்றுகொண்டும்,ஒரு மூலையில் பாட்டி உட்கார்ந்துகொண்டும் இருந்தார்கள்.அடுத்த அறையில் இரண்டு தம்பிகள்.ஒரு வழியாக தைரியமாக ஆரம்பித்தால்,தம்பிகள் சிரிக்கும் சத்தம் கேட்டது.எனக்கு பாட்டும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று அழுகை வந்தது.
    ஒரு வழியாக வாரம் இருமுறை என்று பாட்டு க்ளாஸ் தொடர்ந்தது.சரளி வரிசை,ஜண்டை வரிசை என்று கொஞ்சம் முயற்சியுடன் ஓரளவு தேறினேன்.அடுத்த தலைவலி  "சாதகம்" ரூபத்தில் வந்தது.தினசரி சாதகம் செய்யவேண்டும் என்று டீச்சர் சொல்ல,தாத்தா அதிகாலையிலேயே ஸ்ருதி பெட்டி,பாய் எல்லாம் எடுத்து வைத்து எனக்காக காத்திருப்பார்.எனக்கு கோபமாக வரும்.பேசாமல் தாத்தாவே பாட்டு கற்றுக்கொள்ளலாம் என்று தோன்றும்.அவருக்கு இருக்கும் உற்சாகத்தில் பாதி கூட என்னிடம் இல்லை.நான் எனக்குள்ளேயே பாடிக்கொள்கிறேன் என்றால் கேட்கமாட்டார்.ஸ்கூல் போகும் அவசரம் வேறு.வேண்டா வெறுப்பாக சாதகம் செய்வேன்,அறைக்கதவை மூடிக்கொண்டு!
       பாட்டு க்ளாஸ் இருக்கும் அன்றுமட்டும் எப்படியோ எனக்கு ஜுரம் வரும் அல்லது தலைவலி என்பேன்.டீச்சருக்கு பஸ் கிடைக்கக்கூடாது என்று பிரார்த்தனை செய்வேன்.(பாட்டைத்தவிர டீச்சரை  எனக்கு  ரொம்ப பிடித்திருந்தது)எப்படியோ நாலு மாதம் கழிந்துவிட்டது.வர்ணம்,2,3 கீர்த்தனை என்று கற்றுக்கொண்டேன்.அடிக்கடி வாசலில் கழுதை வருவதாக என் தம்பிகள் வெறுப்பேற்றுவார்கள்.எப்படியோ அக்கம்பக்கத்தில் நான் பாட்டு கற்றுக்கொள்ளும் விஷயம் தெரிந்து, என்னை  பேட்டியே எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.நான் ஒரு குட்டி VIP போல் உணர்ந்தேன்.
       கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு பாட்டின்மேல் ஆர்வம் வந்தது நவராத்திரிக்கு  யார் கூப்பிட்டாலும்,கொஞ்சம் கூச்சத்துடன் எனக்கு தெரிந்த 2,3 கீர்த்தனைகளை பாடி வருவேன்.9 வது போனவுடன் நிறைய படிப்பு இருந்ததால்,பாட்டு கிளாஸுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தோம்.பிறகு சந்தர்ப்பமே கிடைக்கவில்லை பாட்டு கற்றுக்கொள்ள.ஆனாலும் பாட்டு கேட்கும் ஞானம் இருந்துகொண்டிருக்கிறது.எல்லாவித பாட்டையும் ரசிப்பேன்.பேரன் பேத்திகளை தூங்க வைக்க என் பாட்டு கை கொடுத்தது.சத்தமில்லாமல் பாடும் கலை எனக்குதான் தெரியும்.உரக்கப்பாட என்றும் கூச்சம்.மலையாள சானலில் எப்போது பாட்டு கேட்டாலும் சரஸ்வதி டீச்சர் ஞாபகம் மட்டும் வந்துகொண்டுஇருக்கும்!  




                               

1 comment:

  1. Vow Rajee! nee sollave illaye, paatu katthhundennu. edhellamveru nadandhirukka?

    ReplyDelete