பின் பக்கம் இருக்கும் பால்கனியை அன்று எதேச்சையாக திறந்து பார்த்தேன் .அதை உபயோகிக்காததால் புறாக்கள் அங்கு கொட்டமடிக்கும். .அவ்வப்போது அந்த இடத்தை அலம்பி விடுவோம் .ஓரமாக வைத்திருந்த பச்சை பக்கெட்டில் ஏதோ சலனம் .மெல்லப் போய் எட்டிப்பார்த்தேன் .பக்கெட்டின் அடியில் நிறைய புல்,இலைகள் என்று பாய்போல் விரிக்கப்பட்டு,அதன் மேல் அளவு எடுத்தாற்போல் இரண்டு வெள்ளை முட்டைகள்,வேலை செய்யும் பெண்ணை கூப்பிட்டு காட்டினேன்.அவள் முகத்தில் ஒரே சந்தோஷம்.பரவசத்துடன் "ஆண்டி,நம் வீட்டில் குழந்தை பிறக்கப்போகிறது "என்றாள்.புரியாமல் விழித்தேன்."புறா,ஆண்டி,ரெண்டு புறா பிறக்கப்போகிறது.அதோ அதன் அம்மா" என்றாள்.அவள் காட்டிய திசையில் நோக்கினேன்.எதிர் வீட்டு ஜன்னல் விளிம்பில் அந்த புறா உட்கார்ந்திருந்தது.கண்களில் பயத்துடன் எங்களையே முறைத்தது."இவர்கள் நம் முட்டையை நாசப்படுத்தி விடுவார்களோ?"நாங்கள் மெதுவாக கதவை சாத்திக்கொண்டு உள்ளிருந்தபடியே கண்ணாடி வழியாக கவனித்தோம்.புறா மீண்டும் பறந்து வந்து பக்கெட்டிற்குள் உட்கார்ந்தது.
இந்த சம்பவம் தினமும் தொடர்ந்தது.நான் கதவைத்திறந்து பார்க்கும்போதெல்லாம், அம்மா புறா எதிர்பக்கம் பறந்து போய் உட்கார்ந்துவிடும்.என்னையே கவனித்துக்கொண்டிருக்கும்.எனக்கோ,அந்த இடத்தையே அசிங்கப்படுத்துகிறதே என்று தோன்றும்.இருந்தாலும் இந்த ஜீவன் வேறு எங்கு செல்லும் என்று நினைப்பேன்.இங்கு எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது.
இரண்டு வாரங்கள் கழித்து ஒரு நாள் பார்த்தால்,இரண்டு குட்டி புறாக்கள் அந்த பக்கெட்டிற்குள்! எதிர்பக்க ஜன்னலில் உட்கார்ந்து இரண்டு புறாக்கள் என்னையே முறைத்துக்கொண்டு இருந்தன.ஓ,இன்னொன்று தான் அப்பாவோ?அந்த அம்மா புறா, குஞ்சுகளின் பக்கத்திலேயே நாள் முழுவதும் அவற்றை பாதுகாத்துக்கொண்டு இருக்கிறது.இந்த குட்டிகள் பறக்க ஆரம்பித்தவுடன் தான் அது நிம்மதியாக வேறு இடத்திற்கு பறந்து போகும் என்று தோன்றுகிறது.அது தான் அம்மா என்பதோ!இந்த உலகில் அம்மா இல்லாத உயிர் இல்லையே!
நேற்று இரவு முழுவதும் உறக்கம் இல்லாமல் மனம் பழைய நினைவுகளில் தவித்தது.என் அம்மா எங்களை விட்டுப்போய் இன்று சரியாக 2 வருடங்கள்.கடைசி தருணங்கள் நினைவை விட்டு அகலாமல்,மீண்டும் மீண்டும் தோன்றி,கண்கள் குளமாகின்றன.எத்தனை வயதானாலும் அம்மாவிற்கு நிகரேது?நம்மை சுமந்து வளர்த்த அந்த அம்மாவிற்கு உலகத்தில் எதுவுமே ஈடாகாது.அம்மா புறாவின் பயம்,கவலைகள் புரிந்தது.இருக்கட்டும் - அந்த குட்டிபுறாக்கள் பறக்கும் வரை நாம் காத்திருப்போம்!
Super Manni. Long overdue post
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThank you J
DeleteManni,so nice!B I miss your blogs! Write more.
ReplyDeleteManni,so nice!B I miss your blogs! Write more.
ReplyDelete