Wednesday, 7 October 2015

Marakkamudiyadha Appa

September 30 - இந்த வருடம் என் அருமை அப்பா எங்களை விட்டுப்போய் 20 வருடங்கள் ஆகிறது !அன்று என் உலகமே ஸ்தம்பித்து விட்டது போல் உணர்ந்தேன்.இரண்டு குழந்தைகளுக்கு தாயானாலும்,அப்பாவிற்கு நான் என்றுமே ஒரு குழந்தையாகத்தான் இருந்தேன்.அவர் பிரிவை ஏற்றுக்கொள்ள பல வருடங்கள் பிடித்தன.அவர் சாயலில் யாரைப்பார்த்தாலும் இது நம் அப்பாவாக இருக்கக்கூடும் என்று ஒரு முட்டாள்தனமான நம்பிக்கையோடு பார்ப்பேன்.அமுதசுரபி பத்திரிகையில்,ஆசிரியர் கேட்டுக்கொண்டதின் பேரில்"மறக்க முடியாத அப்பா"என்ற தலைப்பில் 2006ல் என் கட்டுரை பிரசுரமாகியது.அந்த கட்டுரை இதோ.  -   ...........

என் தந்தை திரு.பி.சு.கைலாசம் பல சிறுகதைகளும் நாவல்களும் எழுதியவர்.இலக்கியப்பரிசுகளும் பெற்றவர்.காலஞ்சென்ற ஜெயரதன் போன்ற பல எழுத்தாளர்கள் என் அப்பாவின் நண்பர்களாக இருந்தார்கள்.என் அப்பாவின் எழுத்து தி.ஜானகிராமனின் எழுத்துக்கு நிகராக உள்ளது என்று சிலர் பாராட்டியதுண்டு.அதிகம் எழுதியதில்லை என்றாலும் எழுதியதையெல்லாம் சிறப்பாகவே எழுதினார்.இவரது சிறுகதை ஒன்றால் கவரப்பட்டு,பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஒரு விசேஷ பரிசளித்தார்.

என் அப்பாவைப்பற்றிய நினைவுகள் எனக்குள் மிக,மிகப்பசுமையாக உள்ளது.காலம் செல்லச்செல்ல நினைவுகள் மங்கும் என்பார்கள்.ஆனால் கால ஓட்டத்தில் என் அப்பா நினைவுகள் என்னிடம் அதிகரிக்கின்றதே தவிரக் குறையவில்லை.என்ன செய்வேன்!என் மேல் அத்தனை அன்பு செலுத்தியவர் என் அப்பா.

அப்பா ஒரு பெரும்படிப்பாளி.எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார்.எல்லா விதமான ஆங்கில,தமிழ் புத்தகங்கள் என்று,ஒரே சமயத்தில் மூன்று அல்லது நான்கு புத்தகங்கள் படித்துக்கொண்டிருப்பார்.தன கருத்துகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு விவாதிப்பார்.விவாதங்கள் காரசாரமாக நடைபெறும்.நான் வியப்போடு அந்த விவாதங்களைச் செவிமடுப்பேன்.

அப்பாவின் நண்பர்கள் எல்லோரும் நிறையப்படிப்பவர்கள்.அப்பா பேச்சில் ஒரு தனி சுவாரஸ்யம் இருக்கும்.கேட்கக் கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றும்.பெரிய பதவியில் இருந்தும்,எல்லோரையும் அன்பாக,மதிப்புடன் நடத்துவார்.யாரையும் ஒரு சிறிதும் கௌரவக்குறைவாக நடத்திவிட மாட்டார்.மனிதர்களை அவர்கள் மனிதர்கள் என்ற அளவில் கௌரவிப்பது மிக முக்கியம் என்பார். என் இரு சகோதரர்களும், நானும்  புத்தகங்களிடையே வளர்ந்தவர்கள்.எங்களைச் சுற்றிலும் எப்போதும் புத்தகங்கள் தான் இருந்தன.என்னிடம் எப்போதும் பாசத்தைப் பொழியும் அப்பா, பூஜை செய்யும் அம்மாவிற்காக,தோட்டத்திலிருந்து சிரத்தையாக பவழமல்லிப் பூக்கள் பறித்துவரும் அப்பா,உள்ளூரிலேயே எனக்கு மாப்பிள்ளை பார்த்து,கல்யாணம் முடிந்து புக்ககத்தில் கொண்டுவிடும்போது என்னைப் பிரிய மனமில்லாமல் அழுத அப்பா,மாப்பிள்ளைக்கு எப்போதுமே மாமனாராக இல்லாமல் ஒரு நல்ல நண்பராக இருந்த அப்பா,தன் எல்லா பேரக் குழந்தைகளுடனும் தானும் குழந்தையாக விளையாடி மகிழ்ந்த அப்பா,வடக்கேயிருந்து விடுமுறைக்கு குழந்தைகளுடன் நான் வரும் போது ஸ்டேஷனில் பரவசத்துடன் கட்டியணைத்துக் கொள்ளும் அப்பா,பிறகு நான் சென்னையிலேயே குடி வந்த பிறகு தினமும் என்னைப் பார்க்க வேண்டும் என்று 2 கிலோமீட்டர் நடந்து வந்த அப்பா,எனக்கு ஏதாவது ஒன்று என்றால் கண்கலங்கும் அப்பா.....இப்படி அப்பாவின் பாசத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

        அப்பா என்றுமே என்னுடைய அந்தரங்க ஆலோசகராக இருந்தார்.ஆனால் திடீரென்று என்னுடைய 42வது வயதில்,நானும் என் தம்பிகளும் அவர் கையைப் பிடித்துக் கொண்டிருக்க,காயத்ரி மந்திரம் சொல்லியபடியே அப்பா எங்களை விட்டுப் பிரிந்தார்.

         பத்து வருடங்கள் ஆயிற்று அப்பா போய்.ஆனால் நாட்கள் ஆக ஆக அப்பா நினைவுகள் மறுபடி மறுபடி வந்துகொண்டே இருக்கின்றன.அப்பாவின் பிரிவை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.அவர் நினைவு,இதோ இதை எழுதும் இப்போதும் என் கண்களைக் குளமாக்கி விடுகின்றது.அவர் என்றும், என்றென்றும் எங்களால் மறக்க முடியாத அப்பா தான்.


Friday, 25 September 2015

Naaygal Jakkiradhai

    சமீபத்தில் நாங்கள் 3நாட்கள் கோவா சென்றிருந்தோம்.மிக அழகான,பச்சை பசேலென ஒரு சுற்றுலா இடம்.நேர்த்தியான சாலைகள்.படாடோபம் இல்லாத, அமைதியாக வாழும் மக்கள்.அதிகமாக கடல் உணவும்,மது பானமும் தான் இவர்கள் உணவில் பிரதான இடம் வகிக்கிறது .

        கோவாவில் முக்கியமாக கவனித்த ஒன்று, அங்குள்ள தெரு நாய்கள் தான். எங்கும் நாய்கள் மயம்!கோவாவை நாய்களின் தலை நகரம் என்று கூட அழைக்கலாம்.முதல் நாள் கலையில், கணவரும் நானும் வாக்கிங் செல்ல புறப்பட்டோம்.சற்று தூரத்தில் எங்கிருந்தோ தட, தடவென்று இரண்டு மூன்று நாய்கள் எங்களை நோக்கி வேகமாக ஓடி வந்தன.நாங்கள் பயத்தில் உறைந்து நிற்க,நாய்கள் எங்கள் பின்னால் வந்த இரண்டு பன்றிகளை பார்த்து குறைக்க,பன்றிகள் எங்களை நோக்கி ஓடிவர,எடுத்தோமே ஒரு ஓட்டம்.பி டி உஷாவை கூட தோற்கடித்திருப்போம்!என்னை விட என் கணவருக்கு நாய்களைக்கண்டாலே அலர்ஜி,பயம்!சரி எதிர் திசையில் செல்லலாம் என்று திரும்பினால்,பக்கத்து ஓடையிலிருந்து வள், வள் என்று உறுமும் சத்தம். பீதியில் கூர்ந்து கவனித்தோம்.ஒரு பெரிய கருப்பு நாய் எங்களை முறைத்து உறுமியது.எப்போது நம் மீது பாயுமோ என்று பயந்து திரும்பிவிட்டோம். அத்துடன் எங்கள் வாக்கிங் ப்ரோக்ராம்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தோம் .

        அடுத்தது பீச்.2,3 பீச்சுக்கு போனோம்.கோவாவில் பீச்சில் வெளிநாட்டார்களின் ஆதிக்கம் தான். வெயிலிலேயே படுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.பெரிதும் சிறிதுமாக ஏகப்பட்ட நாய்கள் அலைந்து கொண்டு இருந்தன.போதாக்குறைக்கு சில வெள்ளைக்காரர்கள், அவைகளை அருகில் அழைத்து தட்டிக்கொடுத்தார்கள்.அழுக்கு நாய்களும் அவர்கள் மடியில் படுத்து உருண்டன.நமக்குத்தான் அருவருப்பாக இருந்தது.இயற்கையை ரசிப்பதைவிட,ராமநாமம் சொல்வது போல் அடிக்கடி உஷ், உஷ் என்று நாய்களை துரத்துவதே பெரிய பொழுதுபோக்காகி விட்டது.நம் நாட்டில் இவ்வளவு இயற்கை அழகு இருந்தும்,அதை ஏன் பேணிக்காக்கமுடியவில்லை என்று சிந்திக்க தோன்றியது.இதை விட வியக்க வைத்த விஷயம்,விமானம் புறப்படும் போது runwayல் 2 நாய்கள் ஓடிக்கொண்டு இருந்தன .

         என் கணவரை நாய்கள் துரத்திய பல அனுபவங்கள் உண்டு.டெல்லியில் நாங்கள் இருந்தபோது,ஆபிசிலிருந்து இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் வருவார்.அந்த சமயம் தான் தெரு இருட்டில் நாய்கள் அட்டகாசம் செய்து கொண்டிருக்கும்.மாடிப்படியில் கூட பல சமயம் படுத்துக்கொண்டிருக்கும். அப்போதெல்லாம்,உடம்பு வெடவெடக்க,தாழ்ந்த குரலில் மிகவும் அன்பாக என்னையோ,மாமியாரையோ கீழே இருந்து கூப்பிடுவார்.நாய் தன் குரல் கேட்டு தன் மீது பாய்ந்துவிடுமோ என்று உள்ளூர பயம்.கூடவே எங்கள் மீது எரிச்சல்,சட்டென்று கதவை திறக்காததற்க்கு!ஸ்கூட்டரில் போகும்போது கேட்கவே வேண்டாம்.அடிக்கடி தெரு நாய்கள்,காரணமே இல்லாமல் பின்னாடியே துரத்திக்கொண்டு ஓடும்.இவர் படு வேகமாக அவைகளை சபித்துக்கொண்டே போவார்.எங்கேயாவது மோதி விடப்போகிறாரே என்று கவலைப்படுவோம்.இது அடிக்கடி நடந்த  கண் கொள்ளா காட்சி .

        பல நண்பர்கள்,உறவுக்காரர்கள் வீட்டிற்கு இவர் செல்ல மிகவும் தயங்குவார்.காரணம் அவர்கள் நாய்கள் வளர்ப்பதுதான்.இதில் அதிசயம் என்னவென்றால் நாய்கள் என்றாலே வெகுதூரம் ஓடும் இந்த தாத்தாவிற்கு, நாய்கள் மீது அபார மோகம் கொண்ட 3 வயது குட்டி பேத்தி !அமெரிக்காவில் தினம் தினம் பல நாய்களை கொஞ்சி மகிழ்கிறாள் !

Monday, 17 August 2015

Anbulla Amma

நேற்று தான் நடந்தது போல் இருக்கிறது .தூக்கமில்லாத 25நாட்கள் துக்கம்,கவலை ,ஆதங்கம் ,இயலாமை என, பலவித மனநிலையிலும் ,எப்படியேனும் நல்லபடியாக வீடு திரும்பி விடுவீர்கள் என்று ஒரு தீர்க்கமான நம்பிக்கை .என் அம்மா மறைந்த துக்கம் ஆறுவதற்குள் ,நீங்களும் அதே போல அதே ஆஸ்பத்திரியில் ,நினைவுகள் அல்லாட படுத்திருப்பீர்கள் என்று நம்பத்தான் முடியவில்லை .

பல வருஷங்களாக அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் -"நீ காலையில் காப்பியுடன் வரும்போது ,நான் தூக்கத்திலேயே போயிருக்கவேண்டும் .நான் கடவுளை தினந்தோறும் வேண்டுவது இதுதான் .உனக்கு கஷ்டமே கொடுக்கக்கூடாது".நீங்கள் மனதார விரும்பியது எப்படி பொய்த்துவிட்டது ?இவ்வளவு வருடம் படாத அவஸ்தையை 25நாட்களில் அனுபவித்து விட்டீர்கள் .ஒரு அதிகாலை நேரம் ,உங்கள் குழந்தைகள் சூழ்ந்திருக்க ,நீங்கள் மெதுவாக அடுத்த பயணத்தை தொடங்கிய போது ,மனது அதை ஏற்க தயங்கியது .

ஒரு வருஷம் ஓடிவிட்டது .மாமியார் என்ற உறவு ஏதோ ஒரு கால கட்டத்தில் அம்மாவாகி போனது .40வருஷ உறவல்லவா ?உங்களிடம் பெற்றதும் கற்றதும் பல,பல ,விஷயங்கள் .எங்களை சுற்றி நீங்கள் என்றென்றும் இருப்பது போல ஒரு பிரமை இருந்து கொண்டேயிருக்கிறது .

Sunday, 9 August 2015

Piranda Naal

ஆகஸ்ட் 7, என் 62வது பிறந்த நாள் !ஒவ்வொரு வருடமும் கணவர்,குழந்தைகள்,உறவினர்கள்,நண்பர்கள் என்று வாழ்த்துக்களும்,அன்பு ததும்பும் வார்த்தைகளும் வழங்கினாலும், நான் அதிகமாக எதிர்பார்ப்பது பெரியவர்களின் ஆசிர்வாதத்தை தான்.என் அம்மாவும் ,மாமியாரும் இந்த நாட்களையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளமுடியாது என்பதால் ,முன்னரே தெரியப்படுத்தி விடவேண்டும் என்று ஒரு நியதி .அன்று என்னை வாழ்த்தவில்லை என்றால் மிகவும் வருத்தப்படுவார்கள் .இப்படி இருமுறை நடந்து விட்டதால், நான் அவர்களுக்கு முதல் நாளே தெரியப்படுத்தி விடுவேன்.காலையில் அவர்கள் ஆசியுடன் தான் என் நாளே தொடங்கும் .இது பல வருடங்களாக என் வீட்டில் நடக்கும் ஒன்று ."எனக்கு தான் இத்தனை வயதாகிவிட்டதே" என்றால் ,"இல்லை ,எங்களுக்கு இது மிக மகிழ்ச்சியான நாள் .நீ ஆரோக்யத்துடன் ,நல்லபடியாக இருக்கவேண்டும் என்பது தான் எங்கள் பிரார்த்தனை"", என்று மனமார சொல்வார்கள் .

போன வருடம் என் அம்மா காலமாகி ஒரு மாதம் தான் ஆகி இருந்தது .மாமியாரோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருந்தார் .மிகுந்த வேதனையுடன் ஆஸ்பத்திரி போய் அவரை வணங்கினால் ,அவருக்கு எதுவும் புரியவில்லை .மறக்கமுடியாத ஒரு துக்கமான பிறந்த நாள் அது .இந்த வருடம் அதுவும் இல்லை .இனி நாம்தான் பெரியவர்கள் .என்ன தான் குழந்தைகள் ,உறவினர்கள் வாழ்த்து தெரிவிப்பது மிக  மகிழ்ச்சியாக இருந்தாலும் ,இவர்கள் இருவரும் இல்லாதது பெரிய குறை தான்.சதாசர்வகாலம் என் நலனுக்காக பிரார்த்தனை செய்தவர்களாயிற்றே !இவர்கள் இல்லாத குறையை தீர்க்கும் விதம் ,என் நாத்தனாரின் மாமியார் கனடாவிலுருந்து வாழ்த்தி ஆசிர்வதித்தபோது ,அளவில்லா சந்தோஷம் அடைந்தேன் .


என் 60வது பிறந்த நாளை ,மாமியார் ,அம்மா ,குழந்தைகள் என கொண்டாடினோம்.அன்று எடுத்த புகைப்படம் தான் இவர்களின் கடைசி என்று கனவிலும் நினைக்கவில்லை .இருவரும் மிக சந்தோஷமாக கலந்து கொண்டார்கள் .60 வயது என்று எனக்காக ஏகப்பட்ட பிரார்த்தனைகள் ,ஆசிர்வாதங்கள் .இந்த படத்தை ஒரு பொக்கிஷமாக கருதுகிறேன் .அதை பார்க்கும் போதெல்லாம் கண்களை கண்ணீர் மறைக்கிறது .






Thursday, 2 July 2015

My Dear Amma

How time flies !This day exactly a year ago,you left us.I cannot express what I went through-the pain, the anguish, while you lay in the ICU, sometimes conscious, sometimes not.Ten nightmarish days, and on what seemed to be the longest day of our lives, we sat around you,dreading that moment, watching you moving slowly to the other world.I could but only pray for your peaceful end. Under the calm façade, I was crying and reminiscing countless memories.Being your eldest child, I have been constantly with you in your life's journey - your most difficult times, your joys, your sorrows, your very poor health,everything.


At some point, roles were reversed. I became the mother and you, the child to be looked after. Your constantly calling me Rajimma keeps ringing in my ears. You were a difficult person, but we children tried our level best to make your life comfortable. I have learnt so many life's lessons from you, which make me the person I am today. I am sure you are watching over us from wherever you are . I miss you Amma !