Monday, 22 July 2013

Vaahana Anubavangal

என் கணவருடன் ஸ்கூட்டரிலும் காரிலும் பயணிக்கும்போது நடந்த சில சம்பவங்களை நினைத்தால் இன்றும் சிரிப்பு வரும்.அவற்றில் சில இதோ:
        நாங்கள் பல வருடங்களாக இந்த காம்ப்ளெக்சில் வசிப்பதால், நிறைய குடும்பங்களுடன் பரிச்சயம் உண்டு.எப்போது வெளியே கிளம்பினாலும் யாராவது கண்ணில் பட்டு, பேச ஆரம்பித்து விடுவார்கள்.ஸ்கூட்டரில் உட்கார்ந்தபடி அவர்களுடன் பேசிவிட்டு இவர் கிளம்பி போய் விடுவார்.
பேச்சுவாக்கில், நான் பின்னாடி உட்கார காத்திருப்பதை அவர் மறந்திருப்பார்.
இது அடிக்கடி நடப்பதால்,  நான் அங்கேயே நிற்பேன்.சில நொடிகளில் ஞாபகம் வர, என்னை அழைத்துப்போக திரும்பி வருவார் என்று தெரியும்!
      ஒரு முறை,கனத்த மழை பெய்து ஓய்ந்தவுடன்,நாங்கள் இருவரும் அலுவலகம் கிளம்பினோம்.சாலையில் முழங்கால்வரை வெள்ளம்.பின்னால் நான் உட்கார,எங்கள் வாகனம் கிளம்பியது.நடு சாலையில் இவர் ஓட்ட,இரு பக்கமும் நீர்வீழ்ச்சி போல தண்ணீர் பாய்ந்து,பாவம்,நடப்பவர்கள் மீது பொழிந்தது.கண்டிப்பாக சில பேர் எங்களை வசைமாரி பாடியிருப்பார்கள்!கொஞ்ச தூரம் சென்றவுடன்,ஒரு பெரிய கல்லில் மோதி, ஸ்கூட்டர் தடுமாறியது.தண்ணீரின் நடுவே கல் இருப்பதே தெரியவில்லை.நான் வழுக்கி,கீழே தொப்பென்று விழுந்துவிட்டேன்.நல்ல காலம்,உடனே சுதாரித்துக்கொண்டு நின்றுவிட்டேன்.ஆனால் இவர்பாட்டுக்கு ஒன்றும் அறியாமல் போய் விட்டிருந்தார்.நான் விழுந்ததே தெரியவில்லை.நான் செய்வதறியாமல் நின்றுகொண்டிருந்தேன். நடப்பவர்கள் கூச்சல் போட ஒருவழியாக திரும்பிப்பார்த்து அழைத்துப்போனார்.
     முதல்முதலாக வாங்கிய ஸ்கூட்டர் எங்களை பாடாய் படுத்தியது.ஆறு மாதம் நன்றாக ஓடியது.பிறகு அடிக்கடி நின்றுவிடும்.குடும்பமாக போகும்போது பிரார்த்தனை செய்து கொண்டே போவேன்.எங்காவது
நடுவழியில் நின்றுவிட்டால்? அதுவும் சிக்னல் வரும்போது ஒரே டென்ஷன் தான்.திடீரென்று நின்றால் பின்னால் வரும் அத்தனை வாகன ஓட்டுனர்களும் எங்களை திட்டுவார்கள்.அதனால் நான் பின்னால் இருந்தபடியே, கணவரை சாலை ஓரமாகவே ஓட்டுமாறு எச்சரிக்கை செய்வேன்.தேவையில்லாத உபதேசம் கேட்டு அவருக்கு எரிச்சலாக வரும்.எனக்கு தெரியும் என்பார்.பலமுறை அதை தள்ளிக்கொண்டு போகும் அனுபவமும் உண்டு.தெரிந்தவர்கள் யாரும் பார்க்கக்கூடாதே என்று நினைப்பேன்.பல சமயம் சின்னப்பையன் போல் படுவேகமாக உற்சாகத்துடன் ஓட்டும்போது, நான் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கோபிப்பேன்.மேடுபள்ளம் கூடப்பார்க்காமல் தாறுமாறாக  ஓட்டுவார்.
     பலமுறை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, திரும்பி வரும்போது ஒரே மாதிரி இருக்கும் வேறு வண்டியை நம் வண்டி என்று  சாவி போட்டு  கிளப்ப முயற்ச்சித்திருக்கிறார்.அதனால் நான் முன்ஜாக்கிரதையாக நம் வண்டி இருக்கும் இடத்திற்கு போய் நின்று விடுவேன்.என்ன ஒரு ஞாபகமறதி!!
     ஸ்கூட்டரில்தான் இப்படி என்றால்,காரில் அதற்க்கு மேல்.கார் ஹாரன் அடிப்பது மிகவும் பிடித்த ஒன்று.அதிகமாக ஹாரன் அடிப்பவருக்கு பரிசு என்றால் இவருக்கு முதல் பரிசு நிச்சயம்.பழக்கதோஷத்தில் தேவை இல்லாதபோது கூட ஹாரன் அடிப்பார்.ஒரு வேளை noise pollutionல் தானும் ஒரு சிறு துளி  பங்கேற்க்கிராரோ?சிக்னலில் பச்சை வந்துவிட்டால் இவர் வேகத்திற்கு கேட்கவே வேண்டாம்.நான் சீட்டை பிடித்துக்கொண்டு, ஒரு நிமிடம் மூச்சே நின்றது போல் ஆகி விடுவேன்.கண்டிப்பாக எதிலாவது மோதிவிடுவோம் என்று தோன்றும்.இப்படி இருக்க,சில சமயங்களில் படு ரிலாக்ஸ்டாக,கேரளநதியில் படகில் போவதுபோல் மெதுவாக ஒட்டிப்போவார் !என் அவசரத்திற்கு எரிச்சலாக இருக்கும்.
      எல்லாவற்றிற்கும் மேல்,இவர் என்னை ஷாப்பிங் அழைத்துப்போகிறேன் என்றால்,நான் மறுத்து,ஆட்டோவில் போவதை வழக்கமாகிக்கொண்டிருக்கிறேன்.காரணம்,பார்க்கிங் தேடிக்கொண்டே வெகு தூரம் போய் நிறுத்துவார்.என் வீட்டிலிருந்து நடந்தால் கூட அதை விட குறைவான தூரம்தான் இருக்கும்.கடையில் நான் செலவிடும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும்.நடந்து போவதிலேயே நேரம் சரியாகிவிடும்.
       சமீபத்தில் அமெரிக்காபோயிருந்தபோது,அந்த விசாலமான சாலைகளில் இவர் எவ்வளவு சௌகரியமாக  கார் ஓட்டலாம் என்று தோன்றியது.ஆனால் கூடவே இன்னொரு எண்ணம்- அங்கு தான் இவர் ஹாரன் அடிக்கமுடியாதே!






  

Wednesday, 3 July 2013

Oru vizha, oru ennam

சமீபத்தில் ஒரு உறவினரின் மகனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.அவர்கள் புதிதாய் கட்டியிருந்த பிளாட்டிற்கு இன்னும் குடி போகாததால்,அங்கேயே முதல் முதலாக இந்த மங்கள வைபவத்தை வைத்திருந்தார்கள்.பிளாட் வாசலில் பல காலணிகளை பார்த்தவுடன் தெரிந்து விட்டது உள்ளே எவ்வளவு கூட்டம் என்று!ஒரு மூலையிலிருந்து யாரோ எங்களை அடையாளம் கண்டு கூப்பிட, நான் கை ஆட்டினேன்.அதற்குள் இன்னொரு உறவினர் எங்களை நலம் விசாரித்துக்கொண்டே,தள்ளாத குறையாக டிபன் வைத்திருக்கும் இடத்திற்கு அவசரமாக அழைத்துப்போய் விட்டார்.டிபன் தீர்ந்து விடும் போலும்!அது அந்த புது வீட்டின் விசாலமான சமையல் அறை.அவருடன் பேசிக்கொண்டே டிபன் சாப்பிட்டோம்.அப்போது வேறு உறவினர்களும் உள்ளே வந்து குசலம் விசாரிக்க,ஒரே அரட்டை தான்.நான் மெதுவாக ஹாலில் நடப்பவற்றை பார்க்க வெளியே வந்து நின்றுகொண்டேன்.
      எங்கும் ஒரே பேச்சு சத்தம்.உறவினர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து கொண்டிருந்தனர்.இந்த நாளில்,உறவினர் வீட்டிற்கு போவது  பல காரணங்களால் குறைந்தே விட்டது. வருஷக்கணக்காக பார்த்துக்கொள்ள முடியாமல்,இந்த மாதிரி விழாக்களில் தான் எல்லோருமே சந்தித்துக்கொள்கிறோம்.அந்த குறைந்த நேரத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விஷயங்களை பரிமாறிக்கொள்கிறோம்.எல்லோர் முகத்திலும் எவ்வளவு சந்தோஷம்!மாமா,அண்ணா,மன்னி,சித்தி என்று கூச்சலும் சத்தமுமாக இருந்தது.
        பெரிய வீடாக இருந்ததால் நிறைய பிளாஸ்டிக் நாற்காலிகள்  போட்டிருந்தார்கள்.நான் கிடைத்த நாற்காலியில் உட்கார்ந்துவிட்டேன்.என் கணவரின் குரல், அத்தனை சத்தத்திலும் தனியாக கேட்டது.அவர் அந்த சமையலறையில் டேரா போட்டு, ஒரு குட்டி மாநாடே நடத்திக்கொண்டு இருந்தார்.வேறென்ன!வங்கி விஷயங்கள் தான்!அவரை சுற்றி பத்து பேர்!சூழ் நிலையே அவருக்கு மறந்துவிட்டது போலும்!அவரால் அந்த அறையை விட்டு வெளியேயும் வரமுடியவில்லை.பெண்கள் கூட்டம் கதவை அடைத்து கொண்டிருந்தது.
        நடு ஹாலில் மணப்பெண்,பிள்ளை,அவர்கள் பெற்றோர்கள்,வாத்தியார்கள் என்று அதுபாட்டுக்கு சம்பிரதாயங்கள் நடந்து கொண்டிருந்தன.ஒரு சில பேர் அதை கவனமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.சிறிது நேரத்தில் ஒரே சலசலப்பு.மாப்பிள்ளையும் பெண்ணும் நமஸ்கரிக்க எழுந்திருந்தார்கள்.கொஞ்சம் சத்தம் குறைந்து,எல்லோரும் அவசர அவசரமாக ஆசீர்வாதம் செய்ய தயாரானார்கள்.அது முடிவதற்குள் பலர் கீழே சாப்பிட கிளம்பிவிட்டார்கள்.பாவம்,மணமகனின் பெற்றோர் (எங்கள் உறவினர்).அவர்களுக்கு மூச்சு விடக்கூட நேரமில்லை.ஒரே குழப்பம்.எல்லோரையும் கவனிக்க வேண்டாமா? திக்கு முக்காடி போய் விட்டனர்.
      கசமுசவென்று ஒரே சத்தம்.ஜூன் மாத வெப்பம் வேறு.மணமகன் திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தார்.எல்லோரும் அவருக்கு வாழ்த்து கூறி,கை கொடுத்தாலும், சிலரைதான் அவருக்கு அடையாளம் தெரிந்தது.முன்னே பின்னே பார்த்திருந்தால்தானே!
      ஒரு வழியாக நாங்கள் விடை பெற்று கிளம்பிவிட்டோம்.வீட்டில் மாமியார், விழாவைப்பற்றி தெரிந்துகொள்ள,ஆவலுடன் விழித்திருந்தார்."பெண் எப்படி இருந்தாள்?என்ன புடவை?இவர்கள் என்ன சீர் செய்தார்கள்?சம்பந்திகள் எப்படி?" நான் பதில் சொல்ல திண்டாடினேன். அதை எல்லாம் யார் கவனித்தார்கள்?நாம் வெகுநாள்  பார்க்காத உறவினர்களோடு  அல்லவா பேசிக்கொண்டிருந்தோம்?
      மாமியார் சொன்னார்  "சரிதான் போ. பரவாயில்லை.எல்லாம் கல்யாணத்தின் போது பார்த்துக்கொள்ளலாம்.இந்த சாக்கில் நீ நம் உறவினர்கள் எல்லோரையும் பார்த்து பேசி விட்டாயே.பெரிய விஷயம். அது போதும்.யார் யார் வந்தார்கள்,சொல்லு பார்ப்போம்?"
      நாம் எதற்காக இவ்வளவு அலங்கரித்துக்கொண்டு போனோம் என்று ஒரு வினாடி மறந்துவிட்டது.ஒரு மங்களகரமான  விழாவை அமைதியாக,அதிகம் சத்தமில்லாமல் நடத்த, நம்மால் என்று முடியும் ?