பல வருடங்களுக்கு முன் ஒரு வீடு மாற்றும் படலம்.நான்,குழந்தைகள்,மாமியார்,திருவான்மியூரில் ஒரு பிளாட்டில் குடியிருந்தோம்.கணவர் வெளி நாட்டில் இருந்ததால்,கொட்டிவாக்கத்தில் இருந்த அப்பா, தினமும் வந்து எங்களைப்பார்த்து,தேவையான உதவிகள் செய்து போவார்.வாழ்க்கை சீராக ஓடிக்கொண்டிருக்க,திடீரென்று ஒரு நாள் வீட்டுக்காரர்,தான் ரிடைர் ஆகி விட்டதால்,தன் சொந்த வீட்டில் குடியேற தீர்மானித்து இருப்பதாக அறிவித்தார்.அதனால் எங்களுக்கு வீட்டை காலி செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டது.அப்பாவுடன் வீடு தேடும் வேட்டை தொடங்கியது.பல இடங்கள் பார்த்து,கடைசியில் பக்கத்திலேயே ஒரு நல்ல பிளாட் கிடைத்தது."மஹாவீர்" என்ற அந்த building ன் பெயரே எங்களை ஆகர்ஷித்துவிட்டது.என் கணவர் ஆஞ்சநேயர் பக்தர் ஆயிற்றே!ஒரு நல்ல நாளில்,புது வீட்டில் பால் காய்ச்சி பூஜை செய்து வந்தோம்.
அடுத்த கட்டம்,புது வீட்டிற்கு சாமான்களை shift செய்வது.பெரிய லாரி கிடைக்காது ஏனென்றால் பக்கத்து தெருவில் உள்ள இந்த வீடு அதிக தூரம் இல்லாததால் அவர்கள் வரமாட்டார்கள்.சின்ன டெம்போ கிடைக்குமா என்று அப்பா விசாரித்து கொண்டிருந்தபோது,வந்து சேர்ந்தான் ராதாகிருஷ்ணன்!ஆபத்பாந்தவன்.எனக்கு எப்போதெல்லாம் உதவி தேவையோ,அப்போது சொல்லாமல் கொள்ளாமல் எதிரில் வந்து நிற்பான்!எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.அவனுக்கு எப்படி மனதில் அந்த எண்ணம் தோன்றும்?தெரியாது.என் மாமியார் வீட்டில் பல வருஷங்களாக வேலை பார்த்துவந்த பாஞ்சாலியின் கடைசி மகன் அவன்.எனக்கு கல்யாணம் ஆன புதிதில் சிறு பையனாக அறிமுகம் ஆனவன்.அவனுக்கே உரிய பாணியில்,சர்வசாதாரணமாக,வண்டி கொண்டு வருகிறேன்,கவலை வேண்டாம் என்றான்.நண்பனின் டெம்போ எடுத்து வந்து உதவுவதாக கூறி விட்டு சென்றான்.எங்களுக்கு ஒரே நிம்மதி.
அந்த நாளும் வந்தது.சாமானெல்லாம் pack செய்து,ராதாகிருஷ்ணன் வரவிற்காக காத்திருந்தோம்.அம்மா கொடுத்தனுப்பிய சாப்பாட்டுடன்,அப்பா தன் வெளிநாட்டுக்காரில் வந்துவிட்டார்.(அப்போது அப்பாவின் கார் சென்னை வீதிகளில் வலம் வரும்போது நின்று பார்க்காதவர்கள் கிடையாது.வெளிநாட்டு கார்கள் குறைவாக தென்பட்ட காலகட்டம் அது).பத்து மணியளவில் ராதாகிருஷ்ணன் வந்தான்.வண்டி எவ்வளவு பெரியது என்று,ஆவலுடன் பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தோம்.கீழே ஒரு வண்டியும் தென்படவில்லை.எங்கே வண்டி என்று கேட்டவுடன்,அவன் "அதோ "என்று கை காட்டினான்.அவன் காட்டிய திசையில் பார்த்ததும்,"இதுவா" என்று ஒருசேர அலறினோம்.காரணம்,அங்கு இரண்டு மாடுகளுடன் ஒரு மாட்டு வண்டி நின்றுகொண்டிருந்தது!வாயடைத்து நின்ற என்னைப்பார்த்து,இது தான் அம்மா கிடைத்தது.எனக்கு மாட்டு வண்டி ஓட்டத்தெரியும் மூன்று ட்ரிப்பில் முடித்துவிடலாம், என்றானே பார்க்கலாம்.அவனை சுட்டெறிவது போல் பார்த்தேன்.ஆனால் எவ்வளவு சமயோசிதமாக செயல்பட்டிருக்கிறான் என்றும் தோன்றியது.மாமியார் அவனை, சமயத்தில் கை கொடுத்ததற்கு வெகுவாக பாராட்டினார்!என் குழந்தைகளோ -அம்மா,எங்கள் பிரண்ட்ஸ்களெல்லாம் கேலி செய்வார்கள் என்று ரகளை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.ஒரு வழியாக அவர்களை சமாதானப்படுத்தி,சாமான்களை ஏற்றினோம்.காலேஜ் படிக்கும் என் பெண், சிநேகிதிகள் தன்னை மாட்டுவண்டியுடன் பார்த்து விடப்போகிறார்களே என்று முன் கூட்டியே புது வீட்டிற்கு போய் காத்திருந்தாள்.
கிளம்பியது எங்கள் வாகனம்.இரண்டு சுற்று முடிந்து,மூன்றாவது சுற்றில் மிச்சமிருந்த சாமான்கள் ஏற்றப்பட்டு,பெருமிதத்துடன் கிளம்பினான் ராதாகிருஷ்ணன்.என் சின்னப்பையனுக்கோ அவன் அன்புத்தொல்லை தாங்கமுடியவில்லை.அவனையும் அந்த வண்டியில் ஜாலியாக ஏறி வரும்படி சொன்னான்.இவனா ஏறுவான்? எவ்வளவு நண்பர்கள் மாடியிலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்!முன்னால் மாட்டு வண்டி மெதுவாக செல்ல, பின்னால் நாங்கள் அப்பாவின் காரில் போனோம்.ஆமை வேகத்தில் மெதுவாக சென்ற இந்த அபூர்வ ஊர்வலத்தை தெருவில் போகிறவர்கள் ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார்கள்.மிக நேர்த்தியாக இரண்டாவது மாடியில் இரண்டு நண்பர்களின் உதவியோடு சாமான்களை ஏற்றினான் ராதாகிருஷ்ணன்.
அந்த building ன் வாட்ச்மேன் ஏழுமலைக்கு தான் ஒரே டென்ஷன்.ஒவ்வொரு முறை வரும்போது,மாடுகளை அவிழ்த்து கேட்டின் உள்புறம் கட்டிவிடுவான் ராதாகிருஷ்ணன்.அப்போது அவைகள் அங்கே அசிங்கப்படுத்தி விடுமோ என்ற பயத்துடனே கடுகடுப்பாகி விட்டான் ஏழுமலை.அவன் கையில் பணம் அழுத்திய பிறகு தான் அவன் புலம்பல் நின்றது.மாடுகள் சமர்த்தாகத்தான் இருந்தன.இப்படியாக நாங்கள் வீடு மாற்றும் வைபவம் மறக்க முடியாத ஒன்றாக நடை பெற்றது. ,