Sunday, 30 October 2016

Oru Viradham

இரண்டு வாரங்களுக்குமுன் "karvachauth" - வட மாநிலங்களில் பெண்கள் தங்கள் கணவருக்காக விரதம் இருக்கும் பண்டிகை.ஒருமாதம் முன்பே, beauty parlour, மெஹந்தி காரர்கள் என்று எல்லோரும் discount கொடுப்பதாக எல்லா இடங்களிலும் அறிவிப்பு விட்டார்கள்.அகல் விளக்குக்கும் எலுமிச்சை பழத்திற்கும் ஒரே டிமாண்ட்.

காலையில் இருந்தே பெண்கள் facebook ல்   மிகவும் பிஸியாக இருந்தார்கள்.ஒருத்தருக்கொருத்தர் லைட்டாக பழம்,ஜூஸ் என்று என்ன சாப்பிடவேண்டும் என்று டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர்.நாள் முழுக்க பட்டினி கிடக்க முடியாதே!குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு,அங்கும் இங்கும் பல பெண்கள் போய்க்கொண்டிருந்தனர்.எல்லாம் beauty parlour க்கும்,மெஹந்தி இட்டுக்கொள்வதற்கும் தான்!ஆங்காங்கே மெஹந்தி காரர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.பாவம்,கணவர்கள் பாடு திண்டாட்டம்தான்போலும் !டீ ,காபி,cereal என்று சாப்பிட்டுவிட்டு வேலைக்கு போய்விட்டார்கள்.அவர்களுக்காக மனைவிகள் நாள் முழுவதும் விரதம் இருக்கிறார்களே!! சில கூஜா போடும் கணவர்கள் தன் பங்கிற்கும் விரதம் இருந்தார்கள்.

மாலை நாலு மணிக்கு மேல் பார்த்தால்,அரை பாண்ட்,முக்கால் பாண்ட் பெண்கள்,அடையாளமே தெரியாதபடி,புடவை,காக்ரா சோளி,மேக்கப் என்று உருமாறி விட்டார்கள்.கிளப் ஹவுசில் கல்யாணக்களை கட்டிவிட்டது.ஹால் நிறைய சிரிப்பும், பேச்சுமாக அழகழகான பெண்கள்.ஹிந்தி பாட்டிகளெல்லாம், ஜிமிக்கி அணிந்து, பளபள உடைகளில் தள்ளாடியபடி வந்தார்கள்.இன்று அவர்களுக்கு முக்கியத்துவம் வந்து விட்டது.மூத்த பாட்டிகள் தட்டுத்தடுமாறி மெதுவாக ஸ்டேஜில் ஏறி, சேரில் உட்கார்ந்துகொண்டு, மைக்கில் ஸ்லோகம் சொல்லியபடி, பூஜை செய்தார்கள்.கீழே உட்கார்ந்திருந்த அத்தனை பெண்களும் பக்தியோடு,அப்படியே அதை பார்த்து செய்தனர்.

பூஜை முடிந்து, அலங்காரபூஷிணிகள்,  மெல்லமெல்ல ,அன்னநடையாக நடந்து போனார்கள்.ஒரு கையில் பிரசாத தட்டு,நடுவில் எலுமிச்சையில் ஏற்றிய விளக்கு,இன்னொரு கையால் தடுக்கும் புடவையை பிடித்துக்கொண்டு மிக கவனமாக சென்றார்கள்.

இருட்டியபிறகு,நூற்றுக்கு மேலான இத்தனை பெண்களும்,மைதானத்தில் கையில் ஜல்லடையுடன் சந்திரனை பார்க்க காத்திருந்தார்கள்.சந்திரனோ,மேகங்களிடையே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தார்.ஜல்லடை வழியாக சந்திரனை பார்த்தபின்,தண்ணீர் அருந்தி விரதத்தை முடிக்கவேண்டும்.பிறகு கணவரை வணங்கி,அவருடன் சேர்ந்து உணவருந்தவேண்டும்.கூட்டம் கலகல என்று இருந்தது.கணவர்கள் ,குழந்தைகள் என்று அந்த காட்சியை பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.Jogging போய்க்கொண்டிருந்த இரண்டு வெள்ளைக்காரர்கள்,அந்த பெரும் கூட்டத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.எல்லோரையும் போல் ஆகாயத்தை நோக்கிய அவர்கள்,ஒன்றும் புரியாமல் புன்னகையுடன் சென்றனர்.

எனக்கு இந்த விரதங்களில் நாட்டமும் கிடையாது,நம்பிக்கையும் கிடையாது.இதனால் பலன் கிடைக்குமா என்றும் தெரியாது.ஆனால் இந்த காலத்தில்,இவ்வளவு modern பெண்கள் இதை செய்யும்போது,அது ஒரு social activity க்காக என்றாலும்,பலர் அதில் நம்பிக்கை வைத்து செய்வதாக தோன்றுகிறது.ஒவ்வொரு கல்யாணத்தையும் தக்க வைத்துக்கொள்ள பாடுபடும் இந்த தருணத்தில்,இந்த விரதம் ஒரு நல்ல விஷயமாகப்படுகிறது.


                              

Friday, 9 September 2016

Veedu maatrum padalam


பல வருடங்களுக்கு முன் ஒரு வீடு மாற்றும் படலம்.நான்,குழந்தைகள்,மாமியார்,திருவான்மியூரில் ஒரு பிளாட்டில் குடியிருந்தோம்.கணவர் வெளி நாட்டில் இருந்ததால்,கொட்டிவாக்கத்தில் இருந்த அப்பா, தினமும் வந்து எங்களைப்பார்த்து,தேவையான உதவிகள் செய்து போவார்.வாழ்க்கை சீராக ஓடிக்கொண்டிருக்க,திடீரென்று ஒரு நாள் வீட்டுக்காரர்,தான் ரிடைர் ஆகி விட்டதால்,தன் சொந்த வீட்டில் குடியேற தீர்மானித்து இருப்பதாக அறிவித்தார்.அதனால் எங்களுக்கு வீட்டை காலி செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டது.அப்பாவுடன் வீடு தேடும் வேட்டை தொடங்கியது.பல இடங்கள் பார்த்து,கடைசியில் பக்கத்திலேயே ஒரு நல்ல பிளாட் கிடைத்தது."மஹாவீர்" என்ற அந்த building ன் பெயரே எங்களை ஆகர்ஷித்துவிட்டது.என் கணவர் ஆஞ்சநேயர் பக்தர் ஆயிற்றே!ஒரு நல்ல நாளில்,புது வீட்டில் பால் காய்ச்சி பூஜை செய்து வந்தோம்.

அடுத்த கட்டம்,புது வீட்டிற்கு சாமான்களை shift செய்வது.பெரிய லாரி கிடைக்காது ஏனென்றால் பக்கத்து தெருவில் உள்ள இந்த வீடு அதிக தூரம் இல்லாததால் அவர்கள் வரமாட்டார்கள்.சின்ன டெம்போ கிடைக்குமா என்று அப்பா விசாரித்து கொண்டிருந்தபோது,வந்து சேர்ந்தான் ராதாகிருஷ்ணன்!ஆபத்பாந்தவன்.எனக்கு எப்போதெல்லாம் உதவி தேவையோ,அப்போது சொல்லாமல் கொள்ளாமல் எதிரில் வந்து நிற்பான்!எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.அவனுக்கு எப்படி மனதில் அந்த எண்ணம் தோன்றும்?தெரியாது.என் மாமியார் வீட்டில் பல வருஷங்களாக வேலை பார்த்துவந்த  பாஞ்சாலியின் கடைசி மகன் அவன்.எனக்கு கல்யாணம் ஆன புதிதில் சிறு பையனாக அறிமுகம் ஆனவன்.அவனுக்கே உரிய பாணியில்,சர்வசாதாரணமாக,வண்டி கொண்டு வருகிறேன்,கவலை வேண்டாம் என்றான்.நண்பனின் டெம்போ எடுத்து வந்து உதவுவதாக கூறி விட்டு சென்றான்.எங்களுக்கு ஒரே நிம்மதி.

அந்த நாளும் வந்தது.சாமானெல்லாம் pack செய்து,ராதாகிருஷ்ணன் வரவிற்காக காத்திருந்தோம்.அம்மா கொடுத்தனுப்பிய சாப்பாட்டுடன்,அப்பா தன் வெளிநாட்டுக்காரில் வந்துவிட்டார்.(அப்போது அப்பாவின் கார் சென்னை வீதிகளில் வலம் வரும்போது நின்று பார்க்காதவர்கள் கிடையாது.வெளிநாட்டு கார்கள் குறைவாக தென்பட்ட காலகட்டம் அது).பத்து மணியளவில் ராதாகிருஷ்ணன் வந்தான்.வண்டி எவ்வளவு பெரியது என்று,ஆவலுடன் பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தோம்.கீழே ஒரு வண்டியும் தென்படவில்லை.எங்கே வண்டி என்று கேட்டவுடன்,அவன் "அதோ "என்று கை காட்டினான்.அவன் காட்டிய திசையில் பார்த்ததும்,"இதுவா" என்று ஒருசேர அலறினோம்.காரணம்,அங்கு இரண்டு மாடுகளுடன் ஒரு மாட்டு வண்டி நின்றுகொண்டிருந்தது!வாயடைத்து நின்ற என்னைப்பார்த்து,இது தான் அம்மா கிடைத்தது.எனக்கு மாட்டு வண்டி ஓட்டத்தெரியும் மூன்று ட்ரிப்பில் முடித்துவிடலாம், என்றானே பார்க்கலாம்.அவனை சுட்டெறிவது போல் பார்த்தேன்.ஆனால் எவ்வளவு சமயோசிதமாக செயல்பட்டிருக்கிறான் என்றும் தோன்றியது.மாமியார் அவனை, சமயத்தில் கை கொடுத்ததற்கு வெகுவாக பாராட்டினார்!என் குழந்தைகளோ -அம்மா,எங்கள் பிரண்ட்ஸ்களெல்லாம் கேலி செய்வார்கள் என்று ரகளை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.ஒரு வழியாக அவர்களை சமாதானப்படுத்தி,சாமான்களை ஏற்றினோம்.காலேஜ் படிக்கும் என் பெண், சிநேகிதிகள் தன்னை மாட்டுவண்டியுடன் பார்த்து விடப்போகிறார்களே என்று முன் கூட்டியே புது வீட்டிற்கு போய் காத்திருந்தாள்.

  கிளம்பியது எங்கள் வாகனம்.இரண்டு சுற்று முடிந்து,மூன்றாவது சுற்றில் மிச்சமிருந்த சாமான்கள் ஏற்றப்பட்டு,பெருமிதத்துடன் கிளம்பினான் ராதாகிருஷ்ணன்.என் சின்னப்பையனுக்கோ அவன் அன்புத்தொல்லை தாங்கமுடியவில்லை.அவனையும் அந்த வண்டியில் ஜாலியாக ஏறி வரும்படி சொன்னான்.இவனா ஏறுவான்? எவ்வளவு நண்பர்கள் மாடியிலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்!முன்னால் மாட்டு வண்டி மெதுவாக செல்ல, பின்னால் நாங்கள் அப்பாவின் காரில் போனோம்.ஆமை வேகத்தில் மெதுவாக சென்ற இந்த அபூர்வ ஊர்வலத்தை தெருவில் போகிறவர்கள் ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார்கள்.மிக நேர்த்தியாக இரண்டாவது மாடியில் இரண்டு நண்பர்களின் உதவியோடு சாமான்களை ஏற்றினான் ராதாகிருஷ்ணன்.

அந்த building ன் வாட்ச்மேன் ஏழுமலைக்கு தான் ஒரே டென்ஷன்.ஒவ்வொரு முறை வரும்போது,மாடுகளை அவிழ்த்து கேட்டின் உள்புறம் கட்டிவிடுவான் ராதாகிருஷ்ணன்.அப்போது அவைகள் அங்கே அசிங்கப்படுத்தி விடுமோ என்ற பயத்துடனே கடுகடுப்பாகி விட்டான் ஏழுமலை.அவன் கையில் பணம் அழுத்திய பிறகு தான் அவன் புலம்பல் நின்றது.மாடுகள் சமர்த்தாகத்தான் இருந்தன.இப்படியாக நாங்கள் வீடு மாற்றும் வைபவம் மறக்க முடியாத ஒன்றாக நடை பெற்றது.                                         ,     

Friday, 29 July 2016

Tiruppadhiyil Naan

முதன் முதலாக நான் திருப்பதி போனது என் கல்யாணம் முடிந்த பிறகுதான்.அதற்கு ஆறு மாதம் முன்தான் மைத்துனரின் கல்யாணம் நடந்ததால்,இரு தம்பதிகளையும் ஒன்றாக அழைத்து போனார்கள்.மாமனார்,மாமியார்,நாங்கள்,இன்னும் சில உறவினர்கள் என ஒரு கூட்டமே கிளம்பினோம்.மருமகள்கள் இருவரும் அங்கு மாவிளக்கு போடுவதாக மாமியாரின் வேண்டுதல்.திருப்பதியில் அந்த அலைமோதும் கூட்டம் என்னை பிரமிக்க வைத்தது.அவ்வளவு ஜனங்களை நான் இதற்கு முன் எங்கும் பார்த்தது கிடையாது.

எனக்கும் என் ஓர்ப்படிக்கும் ஒரே டென்ஷன்.இருவரும் கோவிலுக்கு மடிசார் புடவை கட்டவேண்டிய நிர்பந்தம்.நாங்கள் தங்கியிருந்த  காட்டேஜிலிருந்து வெகு தூரம் மேடும் பள்ளமுமாக கோவிலுக்கு நடக்க வேண்டும், அதுவும் பழக்கமே இல்லாத இந்த கோலத்தில்!ஒரு வழியாக இருவரும் பெரியவர்களின் உதவியோடு புடவை கட்டிக்கொண்டு,தசா புசாவென்று நடந்து சென்றோம்.போகும் வழியெல்லாம் நிறைய பேர் எங்களையே முறைத்தார்கள்.மடிசாரும்,மஞ்சள்கயிறும்தான் எங்களை புதுமணப்பெண்கள் என்று காட்டிவிட்டதே!மலையில் காற்று பிச்சுவாங்க,புடவை அங்கும் இங்கும் பறக்க ஆரம்பித்துவிட்டது.அரக்குக்கலர் பட்டுப்புடவையில் இரு தேவதைகள் பறப்பது போல் தோற்றமளித்தோம்.ஒரு கை பறக்கும் புடவையை பிடிக்க,இன்னொன்றில் பூஜை சாமான் என்று பேச்சும் சிரிப்புமாக ஒரு வழியாக கோவிலை அடைந்தோம்.

மாமியார் சொல்லிக்கொடுக்க,மாவிளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்துகொண்டோம்.இதனிடையில் இருவருக்கும் பெரிய பிரச்னை. பலமுறை குனிந்து நிமிர்ந்ததில்,புடவை கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்ந்து கொண்டிருந்தது.சரி செய்துகொள்ள,அங்கு மறைவான இடமும் கிடையாது.என்ன செய்ய?அப்படியே வாரிச்சுருட்டி சொருகிக்கொண்டோம்.இப்போது மீனவர்ப்பெண்களைப்போல இருந்த எங்களைப்பார்த்து எல்லோரும் சிரித்து கலாட்டா செய்தார்கள்.இறுக்கமாக சொருகிக்கொண்டிருந்ததால் ஜப்பானியப்பெண்கள் போல் அடிஅடியாக நடந்து,புதிய ஒரு ஸ்டைலில் ஒரு வழியாக எங்கள் இருப்பிடத்திற்கு சென்றோம்.பெருமாள் தரிசனம் திவ்யமாகக்கிடைத்தும்,மனதெல்லாம் அந்த புடவையில் தான் லயித்திருந்தது.

இதன் பிறகு நானும் கணவரும் பலமுறை திருப்பதிக்கு நடந்தே சென்றிருக்கிறோம்.ஒவ்வொரு முறையும் ஒரு வித்தியாசமான அனுபவம்.கடைசியாக போன பயணம் மறக்க முடியாதது.மிக சௌகரியமாக TTDC பஸ்ஸில் அதிகாலையில் புறப்பட்டு திருப்பதி போய் சேர்ந்தோம்.தரிசன வரிசை தான் வெகு நீளம்.கூட்டம் அலை மோதியது.ஆமை வேகத்தில் மெல்ல மெல்ல ஊர்ந்து,நாலு மணி நேரம் கழித்து,தூரத்தில் பெருமாள் தெரிய ஆரம்பித்தார்.கால் வலியால் மிகவும் கஷ்டப்பட்டு, வெப்பம் தாங்க முடியாமல் தவித்த நான் சந்தோஷத்தில் திளைத்தேன்.திடீரென்று ஒரு பெரிய கூட்டம் எங்கள் வரிசையில் சேர்ந்தது.கூச்சல் போட்டுக்கொண்டு,ஒருத்தரை ஒருத்தர் தள்ளிக்கொண்டும்,இடித்துக்கொண்டும் துஷ்டத்தனமாக நடந்து கொண்டார்கள்.பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டுமே என்று எல்லோருக்கும் கவலை.ஜருகண்டி பெண்கள் தங்கள் வேலையில் மும்முரமாக எல்லோரையும் பிடித்து தள்ளிக்கொண்டு இருந்தனர்.சந்நிதியின் மிக அருகில் நான் வந்தபோது,ஒரு ஜருகண்டி பெண் என்னை முரட்டுத்தனமாக பிடித்து தள்ளி விட்டாள்.என் கால் தடுக்கி ஒரு இரும்பு தடுப்பில் பட்டு, வலியால் துடித்துவிட்டேன்.ஒரே ஒரு கணம் தான். வந்ததே கோபம்! ஓங்கி ஒரு அறை விட்டேன் அந்த பெண்ணை!அதற்குள் பெருமாளின் முன் வந்துவிட்டேன்.என் செயலால் படபடக்கும் இதயத்தை பிடித்துக்கொண்டு "பெருமாளே !என்ன செய்து விட்டேன் நான்?ஒரு துரும்புக்குக்கூட கேடு நினைக்காதவள்,இந்த பெண் மேல் கை வைத்து விட்டேனே!தயவு செய்து என்னை மன்னித்து விடு" என்று மட்டும்தான் பிரார்த்தனை செய்ய முடிந்தது.அந்த பெண்ணோ ஒன்றுமே கண்டுகொள்ளவில்லை.

வெளியே இரண்டு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர்.என்னையே பார்ப்பதுபோல் எனக்கு ஒரு பிரமை.என் செயலால் நான் கலங்கி பயந்துவிட்டேன்.என் கணவரோ,அவர்கள் உன்னை பிடிக்கத்தான் காத்திருக்கிறார்கள் என்று பயமுறுத்த,எனக்கு மயக்கமே வந்துவிட்டது.என் குற்ற உணர்வும் அதிர்ச்சியும் குறைய வெகு நேரம் பிடித்தது.ஆங்காங்கே wireless வைத்துக்கொண்டு போலீஸ் - பாதுகாப்பிற்காக தான் -ஆனால் எனக்கு இந்த செயலுக்காக தண்டனை கொடுக்கத்தான் என்று தோன்றியது.எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக மூன்று போலீஸ்காரர்கள் எங்கள் பஸ்ஸில் கீழ் திருப்பதியிலுருந்து சென்னை வரை பயணித்தார்கள்.இப்படியாக பயந்து பயந்து, நிம்மதி இல்லாமல் ஒரு வழியாக சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.என்னை அறியாமல் நடந்த இந்த செயலை நினைத்து இன்று கூட அவமானமாக இருக்கிறது.   

Saturday, 2 July 2016

Puraavum Kunjugalum

பின் பக்கம் இருக்கும் பால்கனியை அன்று எதேச்சையாக திறந்து பார்த்தேன் .அதை உபயோகிக்காததால் புறாக்கள் அங்கு கொட்டமடிக்கும். .அவ்வப்போது அந்த இடத்தை அலம்பி விடுவோம் .ஓரமாக வைத்திருந்த பச்சை பக்கெட்டில் ஏதோ சலனம் .மெல்லப் போய் எட்டிப்பார்த்தேன் .பக்கெட்டின் அடியில் நிறைய புல்,இலைகள் என்று பாய்போல் விரிக்கப்பட்டு,அதன் மேல் அளவு எடுத்தாற்போல் இரண்டு வெள்ளை முட்டைகள்,வேலை செய்யும் பெண்ணை கூப்பிட்டு  காட்டினேன்.அவள் முகத்தில் ஒரே சந்தோஷம்.பரவசத்துடன் "ஆண்டி,நம் வீட்டில் குழந்தை பிறக்கப்போகிறது "என்றாள்.புரியாமல் விழித்தேன்."புறா,ஆண்டி,ரெண்டு புறா பிறக்கப்போகிறது.அதோ அதன் அம்மா" என்றாள்.அவள் காட்டிய திசையில் நோக்கினேன்.எதிர் வீட்டு ஜன்னல் விளிம்பில் அந்த புறா உட்கார்ந்திருந்தது.கண்களில் பயத்துடன் எங்களையே முறைத்தது."இவர்கள் நம் முட்டையை நாசப்படுத்தி விடுவார்களோ?"நாங்கள் மெதுவாக கதவை சாத்திக்கொண்டு உள்ளிருந்தபடியே கண்ணாடி வழியாக கவனித்தோம்.புறா மீண்டும் பறந்து வந்து பக்கெட்டிற்குள் உட்கார்ந்தது. 

           இந்த சம்பவம் தினமும் தொடர்ந்தது.நான் கதவைத்திறந்து பார்க்கும்போதெல்லாம், அம்மா புறா எதிர்பக்கம் பறந்து போய் உட்கார்ந்துவிடும்.என்னையே கவனித்துக்கொண்டிருக்கும்.எனக்கோ,அந்த இடத்தையே அசிங்கப்படுத்துகிறதே என்று தோன்றும்.இருந்தாலும் இந்த ஜீவன் வேறு எங்கு செல்லும் என்று நினைப்பேன்.இங்கு எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது.

           இரண்டு வாரங்கள் கழித்து ஒரு நாள் பார்த்தால்,இரண்டு குட்டி புறாக்கள்  அந்த பக்கெட்டிற்குள்! எதிர்பக்க ஜன்னலில் உட்கார்ந்து இரண்டு புறாக்கள் என்னையே முறைத்துக்கொண்டு இருந்தன.ஓ,இன்னொன்று தான் அப்பாவோ?அந்த அம்மா புறா, குஞ்சுகளின் பக்கத்திலேயே நாள் முழுவதும் அவற்றை பாதுகாத்துக்கொண்டு இருக்கிறது.இந்த குட்டிகள் பறக்க ஆரம்பித்தவுடன் தான் அது நிம்மதியாக வேறு இடத்திற்கு பறந்து போகும் என்று தோன்றுகிறது.அது தான் அம்மா என்பதோ!இந்த உலகில் அம்மா இல்லாத உயிர் இல்லையே!

         நேற்று இரவு முழுவதும் உறக்கம் இல்லாமல் மனம் பழைய நினைவுகளில் தவித்தது.என் அம்மா எங்களை விட்டுப்போய் இன்று சரியாக 2 வருடங்கள்.கடைசி தருணங்கள் நினைவை விட்டு அகலாமல்,மீண்டும் மீண்டும் தோன்றி,கண்கள் குளமாகின்றன.எத்தனை வயதானாலும் அம்மாவிற்கு நிகரேது?நம்மை சுமந்து வளர்த்த அந்த அம்மாவிற்கு உலகத்தில் எதுவுமே ஈடாகாது.அம்மா புறாவின் பயம்,கவலைகள் புரிந்தது.இருக்கட்டும் - அந்த குட்டிபுறாக்கள் பறக்கும் வரை நாம் காத்திருப்போம்!