Wednesday, 21 May 2014

Madamma, Krishnaveni matrum palar

சென்னையை விட்டு பெங்களூருக்கு குடி பெயர்ந்த போது ,எல்லாமே நன்றாக அமைந்துவிட்டது என்று சந்தோஷப்பட்டோம்.அமைதியாக வாழ்க்கையை தொடரலாம் என்று நினைத்த போது, வேலைக்கு ஆள் கிடைப்பது ஒரு பெரிய   சவாலாகிப்போனது.வீட்டு வேலை செய்வதற்கு என்றுமே அஞ்சாத நான்,2 வயதானவர்களையும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற நிலையில்,எப்போதுமே உதவிக்கு ஆள் தேவைப்பட்டது.ஆறு மாதம் கழித்தும் சரியான ஆள் அமையவில்லை.இதுவரை பல  ஊர்களில் வசித்த நான், என்றுமே  வேலைக்கு ஆள் கிடைக்க கஷ்டப்பட்டதில்லை.எல்லா இடத்திலும், ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே ஆள் தான் .அதனால் இதை நான் ஒரு பிரச்னையாகவே கருதவில்லை ........இதுவரை!! 

பெங்களூருக்கு வந்த முதல் நாளே,சாமான்கள் வந்து இறங்கும் முன்னேயே,அலை போல் ஒன்றொன்றாக,நெட்டையும் குட்டையுமாக வேலை தேடி பெண்கள் வர ஆரம்பித்தார்கள்.போட்டி போட்டுக்கொண்டு அவர்கள் வர,நான் என் முகராசியை நினைத்து பெருமைப்பட்டேன்.ஆனால் அது நீடித்தது 2 நாட்கள் தான்.அவர்களை விசாரிப்பதே அலுப்பாகவும், களைப்பாகவும் ஆகிவிட்டது. 

சில பெண்களின் நடை,உடை .பாவனை மிரள வைத்தது.அவர்கள் ஸ்டைலை பார்த்து,என்னை நானே இன்னும் ஒருபடி மேல் நாகரீகமாக்கிக்கொள்ளவேண்டுமோ என்று ஒரு யோசனை தோன்றியது..இது வேலைக்கு உதவாது என்று நிராகரித்தேன். சிலர் மிகவும் பங்கரையாக, பல பிரச்னைகளோடு தனக்கு வேலை கொடுக்கும்படி கெஞ்சினார்கள்.ஐயோ! நமக்கு இருக்கும் பிரச்னை  போறாதா?இவர்கள் வேறா என்று பயந்து ஒதுக்கினேன்.இரண்டு  பெண்கள்,சரிபடும் என்று தோன்றியது.ஆனால் கன்னடத்தில் மட்டும் தான் மாத்தாடினார்கள்!நான் என்ன ஊமை பாஷையிலா பேச முடியும் ? இதற்கிடையில் ஒரு மத்யான வேளையில் ஒருத்தி வந்தாள்.கறுப்பு கண்ணாடியும்,  ஹான்ட்பாகுமாக படாடோபமாக இருந்தாள்.அவளை பார்த்தவுடன்,  எங்கே ரவிக்கை தைக்கிறாள் என்று கேட்கவேண்டும் என்றுதான் தோன்றியது.பிரமாதமான டிஸைனில் தைத்திருந்தது அவள் ரவிக்கை. அவளை பார்த்தால் வேலை செய்பவளாக தெரியவில்லை.மேலும் ஒரே வாக்யத்தில் நாலைந்து பாஷைகள் கலந்து பேசினாள்.தனக்கு 5 பாஷைகள் தெரியும் என்றாள்!அதற்குள் நான் மாதம்மாவை ஏற்பாடு செய்து விட்டதால்,வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.மிகவும் மரியாதையாக பேசி,பை பை மேடம் என்று சொல்லி,தன் மொபைல் நம்பருடைய கார்டை என்னிடம் கொடுத்தபோது, எனக்கு மயக்கமே வந்துவிட்டது. 

மாதம்மா என்பவள் கொஞ்சம் பாவமாக தெரிந்தாலும் , சாமர்த்தியம் அதிகம்.90 வயது மாமியாரை குளிக்க உதவ,துணி துவைக்க,மற்றும் சில சில்லறை வேலைகளுக்கு அவளை வைத்துக்கொண்டேன்.தமிழ் பெண் ஆனதால் சௌகரியம் .மாமியாரைக்கவர்ந்து, 2 மாதத்தில் 2 புடவைகளை  சுருட்டிக்கொண்டு விட்டாள்.

வீடு  பெருக்கி துடைக்க,பாத்திரம் தேய்க்க,கிருஷ்ணவேணி வந்தாள்.எப்போதும் சிரித்த முகம்.இரண்டு   குழந்தைகளுக்கு தாயான அவள்,என் கணவரை படு பாசத்துடன்,அப்பா,அப்பா என்று அழைக்க,அவரோ கூச்ச சுபாவம் உடையவர் ஆததால்,அவளுக்கு பயந்து,அவள் வரும் நேரம் பார்த்து வெளியே ஓடிவிடுவார். ஆனால் அவள் வரும் நேரம் எப்போதுமே  ஏடா கூடமாக இருந்ததால்,சில சமயம் வீட்டுக்குள்ளேயே கண்ணாமூச்சி ஆட வேண்டிவரும்.பாவம் மனிதர் !இப்படியும் ஒரு சங்கடமா!

கிருஷ்ணவேணி வேலை சுமார்தான். பெருமானான, உடல்வாகுடன்,பெரு மூச்சு விட்டுக்கொண்டு வேலை செய்வாள்.குனியாமல் பெருக்கினால் எப்படி? ஒல்லியாக யாரும் கிடைக்கவில்லையா என்று எல்லோரும் கோபிப்பார்கள்.நானும் இந்த காரணத்தினால் அவளுக்கு வேலை கொடுக்கவில்லை என்றால்,பாவம் அவளுக்கு யார்தான் கொடுப்பார்கள் என்று தேற்றுவேன்.ஆனாலும் அவள் நிறைய லீவு எடுப்பதால், வேறு ஆள் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.இவர்கள் எல்லோரும் கையில்  மொபைலுடன் இருப்பார்கள்.ஆனால் நாம் போன் செய்தால் எடுக்கமாட்டார்கள்.லீவு என்றால் சொல்ல மாட்டார்கள். இருந்தாலும் எப்போதும் யாருடனாவது போனில் அரட்டை அடித்துக்கொண்டு இருப்பார்கள்.அவளுக்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டேன்.வேறு ஆள் கிடைக்கும்வரை இவளை கட்டிக்கொண்டு மாரடிக்கத்தான் வேண்டும் போல !

நிலைமை இப்படியிருக்க, ஒரு கட்டத்தில் வீட்டோடவே ஆள் வைத்துக்கொள்ளலாம் என்று தோன்றவே, கணவர்  வாட்ச்மேனிடம் சொல்ல, திடீரென்று ஒரு மதியம் , வாசலில் மூட்டை முடிச்சுடன் மூன்று இளம்பெண்கள் வந்து நின்றனர்.என் கணவர் படபடப்பாக,யாரோ மூன்று அழகிகள் வந்திருப்பதாக கூறி, எப்போதும்போல் மாயமாகிவிட்டார்.பொம்மை போல் மூன்று அழகான இளம்பெண்கள், நாலைந்து airbagகள்.எனக்கு ஒரே அதிர்ச்சி.ஏன் தான் வாட்ச்மேனிடம் சொன்னோம் என்று என்னையே நொந்துகொண்டேன். ஹிந்தியில் பேசிய அந்த கன்னடத்து பெண்கள்,வீட்டு வேலைக்கு யாராவது ஒருத்தரை நான் தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம் என்றனர். இது என்ன சீதா ஸ்வயம்வரமா என்று எண்ணினேன். நன்றாக விசாரணை செய்து, எல்லா ஆதாரங்களையும் பரிசீலனை செய்து, பொம்மையில் ஒன்றை வீட்டிற்குள் அழைத்தேன்.அந்த பெண்ணும் உடனேயே காரியத்தில் இறங்கினாள். நான் டீ போட,  அவள் பரிமாறினாள். துணி மணி மடித்து வைத்தாள், இஸ்திரி போட்டாள். இரவில் என் அம்மாவை கவனித்துக்கொண்டாள். அவளாகவே சில வேலைகளை சொல்லாமலே செய்தாள். என் கணவர் அடிக்கடி என்னைப்பார்த்து அர்த்தத்துடன் புன்னகை புரிந்தார். நான் சோபாவில் உட்கார்ந்தபடி என்னையே கிள்ளிக்கொண்டேன். நமக்கா இப்படி ஒரு அதிர்ஷ்டம்? அதற்குள் கணவரும் மாமியாரும் ஏதேதோ கற்பனையில் மூழ்கினர்! "நீபாட்டுக்கு கவலை இல்லாமல் வெளியில் போகலாம், எத்தனை நேரம் ஆனாலும் கவலை இல்லை, அவள் பார்த்துக்கொள்வாள்" இத்யாதி, இத்யாதி ...........இரண்டாம் நாள், பாவம், சின்னப்பெண், கீழே கொஞ்சநேரம் போய்வரட்டும் என்று அனுப்பி வைத்தேன். அரைமணியில் திரும்பிய பெண், இனி வேலை செய்யப்போவதில்லை என்று இடியை தூக்கிப்போட்டாள். இடையில் என்ன நடந்தது, தெரியவில்லை. நான் ஆத்திரத்தில், உடனே இடத்தை காலி செய்யும்படி உத்தரவிட்டேன். என்ன ஒரு தாற்காலிகமான ராஜபோக வாழ்க்கை!

மிக கஷ்டப்பட்டு, ஒரு நல்ல agencyயிலிருந்து என் அம்மாவை பார்த்துக்கொள்ள, ஒரு night duty பெண் கிடைத்திருக்கிறாள்.ராத்திரி நன்றாக தூங்குகிறாள்.அம்மா கத்தி, கத்தி அவளை எழுப்பவேண்டும். போதாக்குறைக்கு அடிக்கடி " கர்த்தரே" என்று அவள் மொபைல் கத்தும். அவள் வீட்டிலிருந்து போன் வரும்.அவளை கண்டித்து எல்லாவற்றையும்  நிறுத்திவிட்டேன். இப்போது ஒழுங்காக, நன்றாக வேலை செய்கிறாள்.

மூன்று வேலைக்காரிகள் வைத்துக்கொண்டு, நான் ராணி போல் அல்லவா இருக்கவேண்டும்? அதுதான் இல்லை.தினமும் காலையில் இவர்கள் வருவார்களா என்ற suspenseஉடன்  கண்  விழிக்கிறேன்.என் மொபைல் போன் இது போல் பல பெண்களின் நம்பர்களால் நிரம்பி உள்ளது. எல்லாம் ஒரு தற்காப்பிற்கு தான் ! இவர்கள் போய்விட்டால் வேறு எவளையாவது கூப்பிடலாமே!இவர்களை கட்டி மேய்த்து, களைப்புடன் கண் மூடுகிறேன், மறு நாளை எதிர்பார்த்தபடி.

இன்றைய நிலவரம்படி, மாதம்மா ஒரு மாத லீவில் போய் விட்டாள்.கிருஷ்ணவேணிக்கு உடம்பு முடியாமல் 5 நாட்களாக வரவில்லை.ஆபத்திற்கு கை கொடுக்கிறாள் "'கர்த்தரின் பெண் ".என் தேடல் இன்னமும் தொடர்கிறது.